KidsOut World Stories

மூன்று வைரங்கள் David Heathfield    
Previous page
Next page

மூன்று வைரங்கள்

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

மூன்று வைரங்கள்

 

 

 

 

 

ஒரு ஊரில் ஒரு இளம் திருடன் இருந்தான். அவன் தனது பாட்டியுடன் வசித்து வந்தான். ‘ஓ, என் பேரனே, நீ உன் வாழும் வழிமுறைகளை மாற்றிக்கொள்ளவே மாட்டாயா? நான் ஒரு மகிழ்ச்சியற்ற மூதாட்டியாகவே இறக்கப் போகிறேன். நீ குடிக்கிறாய். நீ சூதாடுகிறாய். நீ திருடுகிறாய். நீ பொய் சொல்கிறாய். நீ உன் வழிகளை மாற்றிக்கொள்ளவே மாட்டாயா?’ என்று அவனிடம் கேட்டாள் பாட்டி.

‘எப்படி பாட்டி நான் வழிகளை நான் மாற்றிக்கொள்ள முடியும்? நான் என் வறுமையை மறக்கவே குடிக்கிறேன். என் வாழ்க்கையில் எனக்கு சில இன்பங்கள் வேண்டும் என்பதற்காகவே சூதாடுகிறேன். நாம் சாப்பிடவேண்டும் என்பதற்காக திருடுகிறேன்.’

‘அப்படியானால் குறைந்தது இந்த விஷயங்களில் ஏதாவது ஒன்றையாவது மாற்றிக்கொள்,’ என்றாள் பாட்டி.

அந்த இளம் திருடன் சற்று யோசித்துவிட்டுக் கூறினான்:

‘மிகவும் நல்லது பாட்டி, இனிமேல் நான் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்கிறேன். நீங்கள் வற்புறுத்தினால், இந்தக் கணத்திலிருந்தே நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.’

இப்போது அந்த நகரத்தில் ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு பலம் மிக்க பணக்கார ராஜாவாக இருந்தபோதிலும், ராஜாவின் ஆலோசகர் ஒருபோதும் உண்மையைப் பேசுவதில்லை என்பதால், அவரால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அதனால், ராஜா உண்மையிலேயே நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள விரும்பி, ஒருநாள் இரவு ஒரு பிச்சைக்காரன் போல் மாறுவேஷம் போட்டுக்கொண்டு, அவனைப் போலவே உடையணிந்து கொண்டு, அந்த தெருவில் நின்றுகொண்டிருந்த அந்த இளம் திருடனைச் சந்தித்தார்.

‘நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்று இளம் திருடனைப் பார்த்துக் கேட்டார் மாறுவேடத்தில் இருக்கும் ராஜா.

இளம் திருடன் பேச ஆரம்பித்தபோது, அவன் தனது பாட்டிக்கு சற்றுமுன்பு கொடுத்த வாக்குறுதியை நினைவு கூர்ந்தான். அப்போது அவனது வாயில் இருந்து உண்மை மட்டுமே வெளியில் வந்தது... ‘ஏன் கேட்கிறீர்கள், நான் ராஜாவின் அரண்மனைக்குச் சென்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருட்களைத் திருடப் போகிறேன்’ என்றான்.

‘அரண்மனைக்கா?’ எனக் கேட்டார் ராஜா. ‘ஹா, ஹா, ஹா...’ என்று சிரித்த ராஜா, ‘அப்படியானால், என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்.’ என்று அவனிடம் கூறினார். பின்னர் அவர் அந்த இளம் திருடனை பல தெருக்கள் வழியாக நடந்தே அழைத்துச்சென்றார். கடைசியாக கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ஒரு அரண்மனையின் வாயிலில் வந்து நின்றார்கள் திருடனும் ராஜாவும். ‘காவலர்கள் தங்கள் பணியை மாற்றுவதற்காக சற்று இடைவெளி விடும்போது சிம்மாசன அறைக்கு செல். அங்கு, அரியணைக்கு கீழே, ஒரு பெட்டி இருப்பதையும் நீ பார்ப்பாய். அந்தப் பெட்டியின் உள்ளேயிருந்து உனக்கு ஒரு புதையல் கிடைக்கும்’ என்றார், மாறுவேடத்தில் இருக்கும் ராஜா.

எனவே இளம் திருடன் காவலர்களைத் தாண்டி மெதுவாக உள்ளே சென்றான் - அவன்தான் திருடுவதில் நிபுணன் ஆயிற்றே – அதனால், சிம்மாசன அறைக்குச் செல்ல அவனுக்கு எளிதாக ஒரு வழி கிடைத்தது. அங்கு அரியணைக்கு கீழே, அவன் ஒரு வெள்ளிப் பெட்டியைப் பார்த்தான். அவன் அந்த வெள்ளிப் பெட்டியைத் திறந்துபோது, அதில் மிகப்பெரிய மின்னும் வைரங்கள் இருந்தன. அந்த மூன்று வைரங்களையும் அவன் தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான். பின்னர் அவன் சற்று யோசனையாகத் தயங்கி நின்றான். பிறகு அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்:

‘இந்த மூன்று வைரங்களை வைத்துக்கொண்டு. நான் என் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு பணக்காரனாக ஆகிவிடுவேன். இந்த மூன்று வைரங்களுமே எனக்குத் தேவையா?’

அவன் தனக்குத்தானே பதில் கூறிக்கொண்டபோது, முதலில் தன் மனச்சாட்சியிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. ‘இல்லை, எனக்கு இரண்டு வைரங்கள் மட்டும் போதும்.’

அதனால், அவன் அந்தப் பெட்டியில் ஒரு வைரத்தை விட்டுவிட்டு, காவலர்களைக் கடந்து அரண்மனையை விட்டு நழுவினான். அங்கே இருளில், அந்தப் பிச்சைக்காரர் காத்திருந்தார்.

‘என்ன நீ தேடி வந்ததைத் திருடிவிட்டாயா?’

‘ஆமாம், நான் இரண்டு வைரங்களைத் திருடிவிட்டு, ஒன்றை அங்கேயே விட்டுவிட்டேன். நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள். உங்களுக்கு என்ன வெகுமதி வேண்டும்?’

அப்போது அவன் தன் பாட்டிக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தான். அவன் வாயிலிருந்து அப்போது சத்தியமே வெளிவந்தது. ‘நீங்கள் எனக்கு உதவி செய்தமைக்காக உங்களுக்கு ஒரு வைரத்தை தந்துவிடுகிறேன்.’ பிச்சைக்காரர் போல் தோன்றும் அவருக்கு ஒரு வைரத்தைக் கொடுத்துவிட்டு, தன் குடிசையை நோக்கிச் சென்றான் அந்த இளம் திருடன்.

ராஜா அவனைப் பின்தொடர்ந்து போய், அவன் தன் பாட்டியின் எளிமையான, சின்னஞ்சிறு குடிசைக்குள் நுழைவதைப் பார்த்தார்.

ராஜா இப்போது தன் மாறுவேடத்தைக் களைத்துவிட்டு அவரது அரண்மனைக்குத் திரும்பினார். அடுத்த நாள் காலை அவர் தன் ஆலோசகருக்கு அழைப்பு விடுத்தார்:

‘இன்று இரவு அரண்மனையில் ஒரு திருட்டு நடைபெற்று விட்டது. உடனே அதைப் பற்றி விசாரித்து, என்ன திருடப்பட்டது என்பதைக் கவனியுங்கள்!’ என்று உத்தரவிட்டார்.

அதனால், ஆலோசகர் சிம்மாசன அறைக்கு நேரடியாகச் சென்றார். அவர் அந்தப் பெட்டியை வெளியே எடுத்து, அதை திறந்து பார்த்தார். அதில் ஒரு வைரம் இருப்பதைக் கண்டனர்.

‘வித்தியாசமான நிகழ்வு. புதையல் திருடுபோயிருக்கிறது. ஆனால், எல்லாமே திருடப்படவில்லை.’ அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். ‘ஹா, ஹா, ஹா’ என்று சிரித்தபடி, ஆலோசகர் தனக்குள் கூறிக்கொண்டார், ‘யாருக்கு இதெல்லாம் தெரியப்போகிறது?’ அதனால், ஆலோசகர் தனது சொந்த சட்டைப் பைக்குள் அந்த ஒரு வைரத்தையும் ஒளித்து வைத்துக்கொண்டார்!

‘ஓ என் ராஜாவே! ‘ஓ என் மன்னரே! பாருங்கள், நம் புதையல் திருடுபோய்விட்டது! பெட்டி இப்போது காலியாக உள்ளது!’ என்று கூறினார் ஆலோசகர்.

‘ஆம், பெட்டி காலியாகத்தான் உள்ளது!’ என்றார் ராஜா. ‘அப்படியானால், அந்த இளம் திருடன் வீட்டிற்கு காவலர்களை அனுப்புங்கள்.’ என்று உத்தரவிட்டார் ராஜா.

இளம் திருடன் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டான். ஒரு தூக்குமரம் அங்கு நின்றுகொண்டிருந்தது. ஒரு தூக்குக் கயிறும் அதில் தொங்கிக்கொண்டிருந்தது.

‘ஏன் இப்படி செய்தாய்?,’ என்று திருடனிடம் கேட்டார் ஆலோசகர், ‘நீ ராஜாவின் புதையலைத் திருடினாயா, அந்த மூன்று வைரங்களையும்?’

‘ஆம். நான் திருடினேன்,’ இளம் திருடன் மிகவும் நேர்மையாக உண்மையை மட்டும் பேசினான், ‘ஆனால் நான் மூன்று வைரங்களையும் திருடவில்லை. அதில் ஒரு வைரத்தை அந்தப் பெட்டியிலேயே விட்டுவிட்டேன். நான் இரண்டை மட்டுமே திருடினேன்.’

‘பொய்யன்!’ என்றார் ஆலோசகர். ‘மூன்று வைரங்கள் இருக்கும்போது எந்த திருடனாவது இரண்டு வைரங்களை மட்டும் திருடுவானா?’

‘ஆம். அதுதான் உண்மை.’ என்றான் இளம் திருடன்.

‘பின்னர் அந்த இரண்டு வைரங்களையும் என்ன செய்தாய்?’ என்று கேட்டார் ஆலோசகர். ‘அவற்றைக் காட்டு.’ என்றார்.
அதனால், இளம் திருடன் அவனது சட்டைப் பையில் கைவிட்டு, ஒரேயொரு வைரத்தை மட்டும் வெளியே எடுத்தான். ‘ஏனென்றால், இன்னொரு வைரத்தை எனக்கு உதவிய ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்துவிட்டேன்.’ என்றான் அவன்.

‘பொய்யன்!’ என்றார் ஆலோசகர். ‘எந்த திருடன்தான் தான் திருடியவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வானாம்?’

இப்போது அங்கு பேச ஆரம்பித்தது யார் தெரியுமா? தன் கம்பீரமான உடையில் அங்கு வீற்றிருந்த ராஜா தான். அவர் சொன்னார்:

இந்த திருடன் சொல்வது உண்மைதான். பிச்சைக்காரன் உடையில் மாறுவேடத்தில் சென்றது நான் தான். உண்மையில் அவன் எனக்கு ஒரு வைரத்தைக் கொடுத்தான். ஆனால் மற்றொரு வைரம் எங்கு இருக்கிறது என்று பார்ப்போம்... காவலர்களே, என் ஆலோசகரின் சட்டைப் பையில் அந்த இன்னொரு வைரத்தைத் தேடுங்கள்.’

அதனால், ஆலோசகர் மறுத்தபோதிலும், அவரது சட்டைப் பைகளில் தேடி, மற்றொரு வைரத்தைக் காவலர்கள் கண்டுபிடித்தனர்.
இப்போது அரண்மனைக்கு முன் கூடியிருந்த அனைத்து மக்களிடமும், மரணதண்டனைக்கு சாட்சியாக அங்கே இருந்தவர்களிடமும் ராஜா கூறினார்:

‘இப்போது என்னை ஏமாற்றிய இந்த ஆலோசகரை, நான் நம்பியிருந்த இந்த மனிதனை என்ன செய்யலாம்?’
மக்கள் பார்த்தார்கள். ‘அவரைத் தான் நீங்கள் முதலில் தூக்கில் போடவேண்டும், இளம் திருடனை அல்ல!’ என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.

‘உண்மையில், அதுதான் சரி...’ என்றார் ராஜா.

ஆலோசகரைத் தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றனர். அவரது கழுத்தில் கயிறு கட்டப்பட்டு அவர் இறக்கத் தயாராக இருந்தார்.
‘உண்மை பேசும் இந்த இளம் திருடனை என்ன செய்யலாம்?’ என்று மக்களிடம் கேட்டார் ராஜா.

‘என்ன இப்படி கேட்கிறீர்கள்?’ என்ற மக்கள், ‘இனி அவனை உங்கள் புதிய ஆலோசகராக ஆக்கிவிடுங்கள்!’ என்றனர்.
‘ஹா, ஹா’ என்று சிரித்த ராஜா, ‘அது அப்படியே ஆகட்டுமாக!’ என்றார்.

இவ்வாறாக, அந்த இளம் திருடன் ராஜாவின் ஆலோசகராக ஆகிவிட்டான். ஆனால், கதை இத்துடன் முடியவில்லை. அந்த ராஜாவுக்கு தனது முதல் ஆலோசனையாக அந்த இளம் திருடன் சொன்னது என்னவென்றால்:

‘தூக்குமேடை மீது நிற்கும் அந்த மனிதனைப் பாருங்கள். அவர் ஒரு தவறு செய்துவிட்டார். நானும் பல தவறுகளைச் செய்துள்ளேன். இப்போது நான் உங்கள் ஆலோசகராக இருக்கிறேன்; என் வாழ்க்கை இனிமேல் மாறிவிடும். இனிமேல் நான் என் வறுமையை மறப்பதற்காக குடிக்கமாட்டேன். நான் இனியும் ஏழையாக இருக்கமாட்டேன். இனியும் நான் சூதாட வேண்டிய அவசியமில்லை. இப்போதிலிருந்து என் வேலை தேசத்தின் நலனுக்காக, நல்ல ஆலோசனைகளைக் கூறுவதாக மட்டுமே இருக்கும். நான் பணக்காரன் ஆகப் போகிறேன் என்பதால், நான் இனி திருடப்போவதில்லை. நான் உண்மையான ஆலோசனையை மட்டுமே நிச்சயம் சொல்வேன், அந்த உண்மையான ஆலோசனை என்னவென்றால்...

அந்த உண்மையான ஆலோசனை என்னவென்றால், இந்த ஆலோசகருக்கு அவர் தன்னைத்தானே திருத்திக்கொண்டு வாழ இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே. எனக்கு எப்படி இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டதோ, அதைப் போலவே அவருக்கும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வழங்கப்படவேண்டும். அவரிடமிருந்து செல்வத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது ஆலோசகருக்கான ஆடையை நீங்கள் அகற்றிவிடலாம். அவரது உத்தியோக அந்தஸ்தையும்கூட நீக்கிவிடுங்கள். ஆனால், அவரை ஒரு ஏழை மனிதனாக உயிருடன் வாழவிடுங்கள்.’

Enjoyed this story?
Find out more here