*
பீட்டர் ஒரு இளம் ஆடு மேய்க்கும் பையன். அவன் செம்மறி ஆட்டுக்குட்டிகளையும், செம்மறி ஆடுகளையும் பார்த்துக் கொண்டான்.
அவன் தினமும் காலையில் இருந்து மாலை வரை ஆட்டு மந்தையுடன் மலை அடிவாரத்தில் தங்கினான். அது மிக நீண்ட நேரமாக இருப்பதால் பீட்டர் அடிக்கடி சலிப்படைந்துப் போவான்.
முதலில், அவன் தனது புல்லாங்குழலை வாசிப்பான். ஆனாலும், அவன் சீக்கிரமே சலிப்படைவான்.
அடுத்து, அவன் பெரிய கற்களைக் கொண்டு ஒரு வீடு கட்டுவான். ஆனாலும், அவன் சீக்கிரமே சலிப்படைவான்.
பின்பு, அவன் ஓடையில் இலைகளை மிதக்க விடுவான். ஆனாலும், அவன் சீக்கிரமே சலிப்படைவான்.
பகல் நேரங்கள் மிக நீளமாக இருந்தன.
ஒரு நாள், பீட்டருக்கு ஒரு யோசனை வந்தது. மக்கள் அவனிடம் வந்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
"உதவி! உதவி! ஓநாய் இங்கு இருக்கிறது" என்று அவன் சத்தமாகக் கத்தினான்.
விவசாயிகள் பக்கத்தில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறுவனைக் காப்பாற்ற ஓடி வந்தார்கள்.
பீட்டர் சத்தமாகச் சிரித்தான். “ஹா! ஹா!” என்று சிரித்தான். "உண்மையில் இங்கு ஓநாய் இல்லை."
விவசாயிகள் கோபம் கொண்டார்கள்.
பின்பு, மதியம் மறுபடியும் பீட்டருக்குச் சலிப்பாக இருந்தது.
"உதவி! உதவி! ஓநாய் இங்கு இருக்கிறது" என்று அவன் கூச்சலிட்டான்.
இரண்டாவது முறையும் விவசாயிகள் ஓடி வந்தார்கள். பீட்டர் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இந்த முறை அவர்களுக்கு கோபம் அதிகமாக வந்தது.
“ஹா! ஹா! ஓநாய் இல்லை" என்று அவன் கேலியாகச் சிரித்தான்.
அன்று மாலை ஒரு ஓநாய் வந்தது.
"உதவி! உதவி! ஓநாய் இங்கு இருக்கிறது" என்று பீட்டர் பயத்தில் அலறினான்.
ஒருவர் கூட அவனை நம்பவில்லை. ஒருவரும் வரவில்லை.
ஓநாய் இரண்டு செம்மறி ஆட்டுக்குட்டிகளைத் திருடிச் சென்று செம்மறி ஆடுகளுக்கு பயம் காட்டியது.
பீட்டர் விவசாயியுடன் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு திட்டு வாங்கினான்.
நீ பொய் சொல்லிக்கொண்டே இருந்தால், நீ உண்மையைச் சொல்லும் போதும் யாரும் உன்னை நம்ப மாட்டார்கள் என்று விவசாயி சொன்னார்.
Enjoyed this story?