ஒரு டேனிஷ் கதை

*
ஒரு காலத்தில் ஆடைகளை விரும்பும் ஒரு பேரரசர் இருந்தார்! அவருக்கு வேறு எதையும் விட ஆடைகள் மிகவும் பிடிக்கும்!
ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாளில் அவர் நிறைய புதிய ஆடைகளைக் கேட்பார். மேலும், ஒவ்வொரு வருடமும் அவர் நிறைய புதிய ஆடைகளை அவருடைய கிறிஸ்துமஸ் பரிசாகக் கேட்பார்.
உண்மையில், பேரரசர் எப்போதும் விரும்பியதெல்லாம் ... நிறைய புதிய ஆடைகளே!
பேரரசருக்கு ஆடைகள் இவ்வளவு பிடித்திருந்ததால், அறைகள் நிறைய அவற்றை வைத்திருந்தார்!.
ஒரு நாளைக்கு பன்னிரண்டு முறை ஆடைகளை மாற்றுவார். அந்த அளவுக்கு ஆடைகளை விரும்பினார். (ஐயோ பாவம். அவருடைய துணிகளை துவைப்பவர்களை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்!)
ஒரு நாள், இரண்டு புதியவர்கள் பேரரசரின் அரண்மனைக்கு வந்தார்கள்.
'உலகிலேயே மிக அழகான ஆடைகளை நாங்கள் உங்களுக்கு உருவாக்கித் தருகிறோம். எல்லோரும் உங்கள் ஆடைகளை விரும்புவார்கள்' என்று அவர்கள் இருவரும் பேரரசரை வணங்கிச் சொன்னார்கள்.
'ஆஹா நான் எப்போதும் விரும்பியது இதுதான்!' என்று பேரரசர் நினைத்தார். 'உலகிலேயே மிக அழகான ஆடைகளை அணிய வேண்டும்' என்று நினைத்தார்.
'நீங்கள் இருவரும் எனக்கு இந்த அழகான ஆடைகளை உருவாக்க வேண்டும்!' என்று பேரரசர் கட்டளையிட்டார்.

பல வாரங்களாக அந்த புதியவர்கள் புதிய ஆடைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை யாரையம் பார்க்க விடவில்லை.
ஆனால் பேரரசர் பொறுமையிழந்தார்; இப்போதே புதிய ஆடைகளைப் பார்க்க விரும்பினார்!
அதனால், ஒரு நாள் பேரரசர் ஆடைகளைப் பார்க்க வேண்டும் என்றார். அந்த புதியவர்கள் புதிய ஆடைகளை பேரரசருக்குக் காட்டியபோது, அவர் அறை முழுவதும் சுற்றிப் பார்த்தார். அவர் மேலே பார்த்தார்... கீழே பார்த்தார். ஆனால், புதிய ஆடைகளை அவரால் எங்கும் பார்க்க முடியவில்லை!
'நான் உங்களுக்கு பணம் கொடுத்துத் தைக்கச் சொன்ன புதிய ஆடைகள் எங்கே?' என்று பேரரசர் கேட்டார்.
'ஆனால் அவை இங்கே உள்ளன, அரசே,' முதல் புதியவன் கூறினான். 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவை மிகவும் மென்மையான துணியால், பிரகாசமான நிறங்களுடன், மிகவும் நாகரீகமான வடிவமைப்பில் உருவானவை அல்லவா?
பேரரசர் குழப்பத்துடன் சுற்றிப் பார்த்தார்; அவரால் எதையும் பார்க்க முடியவில்லை!
எனக்கு எந்த ஆடைகளும் தெரியவில்லை' என்று பேரரசர் சொன்னார்.
'இவை தான்' என்று புதியவர்கள் சொன்னார்கள். 'இந்த ஆடைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை மற்றும் அரிதானவை. அதிபுத்திசாலிகளால் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். முட்டாள் மற்றும் அறிவில்லாத மக்களால் அவற்றைப் பார்க்க முடியாது. அதுதான் இந்த அற்புதமான புதிய ஆடைகளின் மாயாஜாலம்!' என்றார்கள்.
'ஓ, நிச்சயமாக, நிச்சயமாக!' என்று பேரரசர் விரைவாகச் சொன்னார். (முட்டாளாகவோ அல்லது அறிவு இல்லாதவராகவோ அவர் தோன்ற விரும்பவில்லை).' இவை அழகாக இருக்கிறது; இதைத் தான் நான் எப்போதும் விரும்பினேன்! என்னுடைய இந்த புதிய ஆடைகளைப் பார்த்து என்னுடைய மக்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவற்றை அணிந்து பார்க்கலாமா?
'நீங்களே பார்க்கிறீர்கள் தானே. ஆடைகளை இன்னும் தயார் செய்து முடிக்கவில்லை. ஆனால் நீங்கள் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால், அந்த பெரிய அணிவகுப்புக்கு முன் சரியான நேரத்தில் அவற்றைத் தயார் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்' என்று புதியவன் சொன்னான்.
பெரிய அணிவகுப்புக்கு புதிய ஆடைகளைத் தயார் செய்து கொடுத்தால் அந்த புதியவர்களுக்கு அவர்கள் விரும்பும் எதையும் கொடுப்பதாக பேரரசர் உறுதியளித்தார். ராஜ்யத்தில் உள்ள அனைவரும் அந்த ஆடைகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார்!

பெரிய அணிவகுப்பு நாள் வந்தது. இரண்டு புதியவர்களும் பேரரசருக்கு அவருடைய புதிய ஆடைகளைக் கொடுத்தார்கள்.
'எல்லோரும் உங்களைப் போற்றுவார்கள் அரசே. புதிய ஆடைகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று புதியவர்கள் சொன்னார்கள்.
இந்தப் புதிய ஆடைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவற்றைப் புத்திசாலி மக்களால் மட்டுமே பார்க்க முடியும் என்ற செய்தி ஊருக்குள் பரவியது. முட்டாளாகவோ அல்லது அறிவில்லாதவர்களாகவோ மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள விரும்பாத பேரரசரின் நண்பர்கள் அனைவரும்...
'ஆஹா, எவ்வளவு அற்புதமானது!'
'ஆஹா, என்ன வண்ணங்கள்!'
'ஆஹா, என்ன ஸ்டைல்!'
'ஆஹா, உங்கள் புதிய ஆடைகள், ம்ம், அற்புதமானவை, அரசே!'
'ஓ அன்பே,' என்று பேரரசர் நினைத்தார். 'என் நண்பர்கள் எல்லாரும் என் புது ஆடைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் என்னால் முடியவில்லை. இதன் என்ன அர்த்தம்? நான் முட்டாள், அறிவில்லாதவன், பேரரசராக இருக்கத் தகுதியற்றவன் என்று அர்த்தமா? யாரும் என்னை முட்டாள் என்று நினைக்கக்கூடாது என்றால், என்னால் ஆடைகளை பார்க்க முடிகிறது என்று நான் நடிக்க வேண்டும். அப்படி செய்தால் யாரும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது!'

பெரிய அணிவகுப்புக்கான நேரம் வந்ததும், பேரரசர் அவருடைய புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, அவரது நண்பர்களிடம் 'என்னைப் பின்தொடருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவருடைய அரண்மனையிலிருந்து வெளியே தெருவுக்கு அணிவகுத்துச் சென்றார்.
மக்கள் கூட்டமாகச் சாலையில் வரிசையாக நின்றுப் பேரரசரையும் பெரிய அணிவகுப்பையும் பார்த்தார்கள். குதிரையில் குதிரை வீரர்கள், நகைகள் அணிந்த பெரிய யானைகள் மற்றும் அழகான உடையணிந்த வீரர்கள் தெருவில் அணிவகுத்துச் சென்றார்கள்.
ஆனால் பெரிய அணிவகுப்பில் அனைவரையும் ஈர்த்தது பேரரசரின் புதிய ஆடைகள்! புத்திசாலிகள் மட்டுமே பேரரசரின் புதிய ஆடைகளைப் பார்க்க முடியும் என்று மக்கள் அனைவரும் கேள்விப்பட்டிருந்தார்கள். முட்டாளாகவோ அல்லது அறிவில்லாதவர்களாகவோ காட்டிக்கொள்ள விரும்பாத அனைவரும்
'ஆஹா, என்ன ஒரு அழகான உடை!'
'ஆஹா, அவர் புத்திசாலியாகத் தெரியவில்லையா!
'பேரரசரின் புதிய ஆடைகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!'
பேரரசரால் அவருடைய புதிய ஆடைகளைப் பார்க்க முடியாவிட்டாலும் கூட, புதிய ஆடைகளை அனைவரும் ரசித்ததில் பேரரசர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்!
திடீரென்று, கூட்டத்திலிருந்து ஒரு சிறிய குரல் கத்தியது: 'பொறுங்கள்! அவர் எதுவும் அணியவில்லை! பேரரசர் பிறந்த தினத்தைப் போலவே நிர்வாணமாக இருக்கிறார்!'

கூட்டத்தில் ஒரு அமைதியான அமைதி நிலவியது. அந்த பெரிய அணிவகுப்பு நின்றது... பின்னர்... அனைவரும் திடீரென்று சிரித்தனர்!
'சின்னப் பையன் சொல்வது சரி தான். பேரரசர் எந்த ஆடையும் அணியவில்லை!' என்று அவர்கள் சொன்னார்கள்.
பேரரசர் முகம் சிவந்து வெட்கிப் போனார். அவர்கள் சொன்னது சரி தான். அவர் எந்த ஆடையும் அணியவில்லை!
'எனக்கு ஒரு ஆடையைக் கொடுங்கள்' என்று பேரரசர் அவருடைய நண்பர் ஒருவருக்கு உத்தரவிட்டார். 'நான் அரண்மனைக்குத் திரும்பிச் சென்று சில ஆடைகளை அணிய வேண்டும்! ஓ, நான் அந்த புதியவர்களை ஒருபோதும் நம்பியிருக்கக் கூடாது. அவர்கள் என்னைப் புகழ்ந்து பேசி, என் பணத்தை மட்டுமே எடுக்க விரும்பினர்!'
அன்று முதல், பேரரசர் அந்தச் சிறுவனுக்கு அவருடைய அரண்மனையில் ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்தார். ஏனென்றால், அவன் மட்டுமே உண்மையைச் சொன்னான். மேலும், பேரரசருக்கு ஆலோசனைத் தேவைப்படும் போதெல்லாம் அவர் முதலில் அந்தச் சிறுவனிடம் தான் கேட்பார்.
Enjoyed this story?