ஒரு துருக்கியக் கதை

*
ஒரு சமயத்தில் ஒரு தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது. அவனை அவர்கள் அலி என்று அழைத்தனர்.
அந்த குழந்தை அந்த தம்பதியருக்கு ஒரு ஆச்சரியமாக வந்து சேர்ந்தது. ஏன் என்றால் அந்த குழந்தை பிறக்கும் பொழுது ஒரு கட்டை விரலைக் காட்டிலும் பெரியதாக இருக்கவில்லை.
அந்த குழந்தையின் தாயும் தந்தையும் மிக்க கவலை கொண்டார்கள், ஆனால் அவர்கள் தங்களுக்குள் நினைத்துக் கொண்டார்கள்,
‘இது கடவுள் நமக்கு அளித்திருக்கிறார், ஒரு நாளில் நமது மகன் ஒரு பெரிய, வலிமையான சிறுவனாக வளர்ந்து விடுவான்’.
ஆனால் பல வருடங்கள் கழிந்து விட்டன. ஆனாலும் அந்த குழந்தை அலி வளரவே இல்லை. அவன் ஒரு கட்டை விரல் அளவிலேயே சிறியதாக இருந்தான்.
ஒவ்வொரு நாள் இரவிலும் உணவு அருந்த அமரும் பொழுது, அந்த தாய் தனது மகனுக்காக மேஜையில் ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருப்பாள்.
அவனுக்கு முன்பாக ஒரு குட்டி தட்டினை வைத்திடுவாள் மற்றும் அதில் ஒரு தேக்கரண்டி நிறைய காய்கறிச் சாற்றினை ஊற்றி நிரப்புவாள்.
மேலும் அலிக்கு என ஒரு மிகச்சிறிய கோப்பை வைக்கப்பட்டு இருக்கும். அது ஒரு சொட்டு தண்ணீர் கொண்டு நிரப்பப்படும்.
அந்த குடும்பம் வீட்டிற்குள் இருக்கும் வரை எல்லாமே சரியாகத் தான் இருந்தது. ஆனால் தங்களது பையன் அலியைப் பற்றி அவனது தந்தையும் தாயும் வெட்கம் அடைந்தனர். வெளியில் யாரேனும் தங்கள் மகனைக் கண்டால் அந்த இளம் பிள்ளையை அவர்கள் கேலி செய்வார்களே என்று நினைத்தார்கள். எனவே அவனை அவர்கள் எந்நேரமும் வீட்டிற்கு உள்ளேயே, யாருடைய பார்வையில் இருந்தும் தப்பிக்கும் வகையில் ஒளித்து வைத்திருந்தார்கள்.
இவ்வாறு பல வருடங்கள் கழிந்தன. ஒரு கட்டத்தில் அலி தனது இருபதாவது பிறந்த நாளைக் கொண்டாடினான்.
அலி இன்னமும் ஒரு கட்டை விரல் அளவு தான் இருந்தான், ஆனால் அவனது குரலோ மிக ஆழமாகவும் மிகவும் உரத்த குரலோடும் இருந்தது.
உண்மையில் யாரேனும் அவர்களது மகன் பேசுவதைக் கேட்டிருந்தால், அது ஒரு மிகப்பெரிய உருவம் கொண்ட ஒருவனது குரல் என்றே நினைத்திருப்பார்கள்.
அலி மிகவும் கவலை கொண்ட ஒரு இளைஞனாக இருந்தான். ஏன் என்றால் அவனுக்கு நண்பர்களே கிடையாது. தனது நேரம் அனைத்தையும் தன் பெற்றோரின் வீட்டிற்குள் ஒளிந்து இருந்து கழிக்க வேண்டி இருந்தது.
ஒரு நாள் அலியின் தந்தை அடுத்த நகரில் உள்ள சந்தைக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த முதிய மனிதர் அன்று இரவுக்கு முன்பாக சந்தையில் இருந்து திரும்பி வர இயலாது என்பதால் அன்று இரவு சந்தைக்கு அருகில் ஒரு விடுதியில் தங்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தார்.
அலி தனது தந்தையிடம் தன்னையும் அந்த பயணத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கெஞ்சினான். ஆனால் அவனது தந்தையோ அந்த யோசனையைக் கேட்டதும் திடுக்கிட்டது போல பதற்றப்பட்டார்.
‘இன்று வரை நாங்கள் உன்னை ஒரு நாள் கூட வெளியே எடுத்துச் சென்றது கிடையாது. இப்பொழுது அதைச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை’ என்று அலியின் தந்தை கூறினார். ‘மற்ற மக்கள் உன்னைப் பார்த்து விடாமல் இருப்பதற்கு நான் உன்னை எவ்வாறு பாதுகாப்பேன் அல்லது ஒளித்து வைப்பேன்’ என்றார்.
அலியோ, ‘அது எளிது தான் அப்பா’ என்று தனது ஆழமான மற்றும் ஏற்றக் குரலில் பதிலளித்தான். ‘நீங்கள் உங்கள் சட்டை ப் பைக்கு உள்ளே என்னை வைத்துக் கொள்ளலாம். நான் அதில் இருப்பது யாருக்கும் தெரியாது. அந்த பையில் ஒரு துளையை போட்டுக் கொள்ளலாம், அதன் வழியாக நான் சுவாசித்துக் கொள்ள முடியும் மற்றும் வெளியே நடப்பதை நான் பார்க்கவும் முடியும். உலகத்தின் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் முடியும்' என்றான்.’
அந்த வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு அலி எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்பதை அறிந்த அலியின் தந்தை வியப்புக்கு உள்ளானார். அதனால் தனது ஒரே மகனின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் போனது.
அந்த முதிய தந்தையும் தனது சட்டைப்பையில் ஒரு துளையிட்டு அலியை தனது சட்டைப்பைக்குள் ஏறி நுழைந்திட உதவி செய்தார்.
அலியின் தாய் அவர்களது பயணத்திற்குத் தேவையான பைகளை அவர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு நல்வாழ்த்து வழங்கினார். அதன் பின்னர் அலியும் அவனது தந்தையும் அருகில் இருக்கும் அந்த நகரத்து சந்தையை நோக்கி பயணம் செய்தார்கள்.
நாள் முழுவதும் பயணம் செய்த பிறகு, அலியும் அவனது தந்தையும் சாலை ஓரமாக இருந்த ஒரு தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.
அலியின் தந்தை அலியிடம், ‘நாம் இன்றிரவு தங்கிக் கொள்வதற்காக ஒரு அறை மட்டும் வாடகைக்கு பெற்றுக் கொள்வோம். நாளை அதிகாலையில் சந்தைக்குச் செல்வோம். அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பிச் செல்வோம்’ என்றார்.
‘விடுதி ஒன்றில் தாம் தங்கப் போகிறோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை’ என்று ஆச்சரியப்பட்டான் அலி.
ஏற்கனவே அந்த பயணத்தின் பொழுது அவன் பார்த்து வந்த காட்சிகளால் வியப்பின் எல்லைக்கே சென்று விட்டான் அலி. அவன் தன் வாழ்நாளில் இது வரை வீட்டைத் தவிர வேறு எங்கும் உறங்கியது கிடையாது.
அலியின் தந்தை அந்த அறைக்கான வாடகையை அளித்து விட்டு தனது பைகளை ஏணிப்படிகள் வழியாக மேலே உள்ள அறைக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் உணவு தயாரிக்க முனைந்தார்.
அலியின் தந்தை தான் கொண்டு வந்த பைகளில் உள்ள பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்து விட்டு உடலைக் கழுவி சுத்தம் செய்து கொண்டார். அலியை இன்னமும் தனது சட்டைப்பையில் ஒளித்து வைத்தபடியே கீழே உள்ள உணவு விடுதிக்குச் சென்றார். தனது சிறு மகனுக்கு ஏதேனும் உணவை ஒளித்துக் கொண்டு செல்ல முடியுமா என்றும் யோசித்தார்.
அப்பொழுது யாரும் எதிர்பார்த்திடாத நிகழ்வு ஒன்று நேரிட்டது. விருந்தினர் அனைவரும் உணவுக்காக தயாராக அமர்ந்திருந்த வேளையில், அந்த விடுதிக்குள் திருடர் கும்பல் ஒன்று நுழைந்தது.
கொடியவர்களாகத் தோற்றமளித்த அந்த மூன்று நபர்கள் கொண்ட கும்பல், அவர்களை நோக்கி தங்களது துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டத் தொடங்கினார்கள. அங்கிருக்கும் ஆண்களும் பெண்களும் தாங்கள் வைத்திருக்கும் பணம், நகைகள் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை அவர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்கள்.
அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் மிகவும் பயந்து போனார்கள். அலியின் தந்தையும் பயந்து விட்டார். ஆனால் அவர்கள் அனைவரும் திருடர்கள் ஆணையிட்டபடி தங்களிடம் இருக்கும் பணப்பைகள் மற்றும் நகைகளை எடுத்து மேஜை மீது வைக்கத் தொடங்கினார்கள்.
திடீரென்று அங்கே ஒரு பெரிய உரத்த, ஆழமான குரல் ஓங்கி ஒலித்தது. அது எங்கிருந்து வருகிறது என்பதே தெரியவில்லை.
‘உங்கள் துப்பாக்கிகளைக் கீழே போடுங்கள்’ என்று அந்த உரத்த குரல் ஆணையிட்டது. ‘நான் இதோ வந்து விட்டேன், உங்களைப் பிடித்துக் கொண்டு போய் காவலர்களிடம் ஒப்படைக்கப் போகிறேன்.’
அந்த குரல் எங்கிருந்து வருகிறது என்பதே யாருக்கும் புரியவில்லை. அந்த திருடர்கள் உணவு விடுதியைச் சுற்றிலும் எல்லா திசையிலும் பார்த்தார்கள், ஆனால் அவர்களால் அந்த குரலுக்குரியவரை பார்க்க முடியவில்லை.
அப்பொழுது அந்த குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. இந்த முறை இன்னும் அதிக உரத்த ஒலியில் முழங்கியது. ‘உங்களது கொடிய செயல்களுக்காக உங்களைத் தண்டிக்கப் போகிறேன், நீங்கள் இனிமேல் பல வருடங்கள் சிறையில் தான் கழிக்க வேண்டி இருக்கும்’.
அந்த குரல் எங்கிருந்து வருகிறது என்பதை அந்த திருடர்களால் அறிந்து கொள்ள முடியாத காரணத்தால், அந்த குரல் ஒரு பேய்க்குத் தான் சொந்தமானது என்று நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
இதில் ஒரு விஷயம் என்ன என்றால், திருடர்கள் போலீஸ் காவலர்களைக் காட்டிலும் பேய்களுக்குத் தான் அதிகம் பயப்படுவார்கள்.
திடீரென்று அந்த திருடர்கள் தங்களது துப்பாக்கிகளைக் கீழே போட்டு விட்டு அந்த விடுதியை விட்டே ஓடிப் போய் இரவின் இருளுக்குள் மறைந்து விட்டார்கள்.
அந்த திருடர்கள் தங்களை ஒன்றும் செய்யாமல் ஓடிப்போனது பற்றி விருந்தினர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட, அவர்களுக்கும் பேய் பற்றிய பயம் இருந்தது மற்றும் அவர்களும் தங்களது அறைகளுக்குச் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள்.
‘பயப்படாதீர்கள்’ என்று அலியின் தந்தை அவர்களைப் பார்த்து கூறினார். ‘பேசியது பேய் அல்ல. என் மகன் தான்’ என்றார்.
அவ்வாறு கூறி விட்டு அலியின் தந்தை தனது சட்டைப்பைக்குள் கையை விட்டு, தன் மகன் அலி அவரது கைக்குள் ஏறி வருமாறு செய்தார். பின்னர் அவர் மெதுவாக அலியை அருகில் இருந்த மேஜை மீது நிற்கச் செயது விருந்தினர் அனைவருக்கும் வணக்கம் கூறச் செய்தார்.
அலி தனது ஆழ்ந்த கர்ஜனைக் குரலில், ‘அந்த திருடர்கள் இனிமேல் திரும்பவும் இங்கே வர மாட்டார்கள் என்பது நிச்சயம்’ என்று கூறி தான் நடத்திய சாகசத்தினால் ஒரு புன்னகை புரிந்தான்.
அந்த விருந்தினர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஒரு கட்டை விரல் அளவுள்ள ஒரு பையனை நேரில் பார்க்கும் பொழுது அவர்களது ஆர்வம் பொங்கியது.
அதைக் காட்டிலும் தங்களையும் தங்களது விலை உயர்ந்த பொருட்களையும் திருடர்களிடம் பறி கொடுக்காமல் காப்பாற்றிய அலிக்கு அவர்கள் மிகவும் நன்றி உடையவர்களாக இருந்தார்கள். அலிக்கு நன்றி கூறினார்கள். அவனது தந்தையுடன் கைகுலுக்கினார்கள், இப்படிப்பட்ட ஒரு துணிச்சலான மகனைக் கொண்டிருப்பதற்காக அந்த தந்தை பெருமைப்பட வேண்டும் என்று கூறினார்கள்.
காலையில் அவர்கள் விடுதியை விட்டு சந்தைக்குச் செல்வதற்காக நடக்கத் தொடங்கினார்கள். அலியின் தந்தை தனது மகன் அலியை தனது சட்டைப்பையில் இருந்து வெளியே எடுத்து தனது தோளின் மீது வைத்துக் கொண்டார்.
காலை முழுவதும் அந்த சந்தையிலேயே கழிந்தது. தங்களது வீட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள பல மக்களிடம் தனது மகனை அறிமுகம் செய்து வைத்தார். அவர் மிகவும் பெருமையுடன் இருந்தார். தனது மகன் எவ்வாறு மூன்று திருடர்களிடம் இருந்து மக்களைப் பாதுகாத்தான் என்று அவர்களிடம் விவரித்தார்.
அன்று மாலையில் தந்தையும் மகனும் வீட்டிற்கு திரும்பினார்கள். அலியின் தாய் தன் மகன் அலி தனது தந்தையின் தோள் மீது அமர்ந்தவாறு வருவதைக் கண்டு மிகவும் கவலைப்பட்டாள்.
அவள் தனது கணவரிடம், ‘யாராவது அவனைப் பார்த்து விட்டால் என்ன செய்வது?’ என்றாள்.
ஆனால் முதியவரோ புன்னகை புரிந்தவாறே தனது மனைவியடம் விடுதியில் நேர்ந்த சம்பவத்தையும் தங்கள் மகன் செய்த சாகசத்தையும் விளக்கினார். தங்கள் மகன் அலி எவ்வாறு திருடர்களிடம் இருந்து பாதுகாத்தான் என்றும் விளக்கினார்.
‘நமது மகனைப் பற்றி வெட்கப்படுவது மிகப் பெரிய தவறு ஆகும். இத்தனை வருடங்களாக நமது மகனை ஒளித்து வைத்திருந்திருக்கக் கூடாது. நாம் நமது மகன் அலியைப் பற்றியும் அவனால் செய்யக்கூடிய சாகசங்கள் பற்றியும் பெருமைப்பட வேண்டும்’ என்று அவர் விளக்கினார்.
அலியின் தாயும் தனது மகனின் துணிச்சலைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உண்மையிலேயே மிகவும் பெருமை கொண்டாள். இனிமேல் ஒரு பொழுதும் தனது மகனை ஒளித்து வைக்கவோ அல்லது அவனைப் பற்றி வெட்கப்படவோ மாட்டேன் என்று உறுதி அளித்தார்.
அந்த நாளில் இருந்து கட்டை விரல் அலி என்ற அந்த மனிதன் தனது பெற்றோர்களின் தோள்களில் ஏறியபடி பல இடங்களுக்கும் பயணம் செய்தான். பல இடங்களைப் பார்த்தான், பல சாகசங்களைச் செய்தான்.
Enjoyed this story?