ஒரு கிரேக்கக் கதை

*
வெகு காலத்திற்கு முன்பு, மிகத் தொலைவில், ஒலிம்பஸ் மலையின் மேகங்களுக்கு நடுவில், தெய்வங்கள் இன்பமும் சண்டையும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் சண்டையிட்டுச் சோர்வடையும் போதெல்லாம், அவர்களுடைய கவனத்தை மக்களுடன் விளையாடுவதில் திருப்பினார்கள். நீங்கள் உங்கள் பொம்மைகளுடன் விளையாடுவது போல.
ஒரு நாள், தெய்வங்கள் பண்டோரா என்ற அழகான பெண்ணை உருவாக்கி, அவளைப் ப்ரோமிதியஸிடம் கூட்டிச் சென்றார்கள். தெய்வங்களிடமிருந்து நெருப்பைத் திருடி மனிதர்களுக்குக் கொடுத்ததால் தெய்வங்கள் அவன் மேல் கோபமாக இருப்பது அவனுக்குத் தெரியும். தெய்வங்கள் அவனை ஏமாற்றி அவர்களுக்குச் சொந்தமானதை எடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று நினைத்து பயந்த ப்ரோமிதியஸ், அவளைப் புறக்கணிக்க முடிவு செய்தான்.
ஆனால், அவனது சகோதரன் எபிமிதியஸ், அழகான பண்டோரா மேல் காதல் கொண்டான். அவளைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான். அந்த ஜோடி மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்ந்தது... ஒரு நாள் தெய்வங்களின் தூதரான மெர்குரி ஒரு மர்மமான பெட்டியுடன் வந்தார். அவர் இல்லாதபோது அதை கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு பண்டோராவிடமும் அவளது கணவரிடமும் சொன்னார். அவர் செல்வதற்கு முன், அதை ஒருபோதும் திறந்து பார்க்கக் கூடாது என்று அவர்களிடம் சத்தியம் வாங்கினார்.

பண்டோராவால் பல நாட்கள் பெட்டியிலிருந்து தன் கண்களை எடுக்க முடியவில்லை. எந்நேரமும், உள்ளே என்ன இருக்கிறது என்று அவள் யோசித்தாள்; அதற்குள் மின்னும் நகைகள், கவர்ச்சியான ஆடைகள், தங்க நாணயங்கள் நிறைந்து இருக்குமா? எபிமீதியஸ் இல்லாத போதெல்லாம், சுற்றி யாரும் இல்லாத போதெல்லாம், பண்டோரா பெட்டியின் பளபளப்பான மரம் மற்றும் தங்கக் கொக்கியின் மேல் அவளுடைய விரல்களால் வருடுவாள். ஒரு நாள், எபிமீதியஸ் வேட்டையாடச் சென்றபோது, அவளால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவளுடைய ஆர்வம் அவளை வென்றது. யாரும் அவளைக் கவனிக்கவில்லை என்று தெரிந்து கொண்டு, பெட்டியை நோக்கிச் சென்று கொக்கியைத் திறந்தாள். மெதுவாக மூடியைத் தூக்கி, உள்ளே பார்த்தாள்.
ஆனால், அதில் மின்னும் நகைகள், கவர்ச்சியான ஆடைகள், தங்க நாணயங்கள் எதுவும் இல்லை - அதற்கு பதிலாக மனிதர்களுக்கு இப்போது தெரிந்த அனைத்துத் தீய சக்திகளையும் தெய்வங்கள் பெட்டியில் நிரப்பி வைத்திருந்தார்கள். நோய், துயரம் மற்றும் மரணம் அவளைச் சுற்றி பாய்ந்து வந்து கொட்டின. பண்டோரா வலி மற்றும் பயத்தால் கத்தினாள். வாசலில் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த எபிமீதியஸ் அவள் அழுகையைக் கேட்டான். குதிரையிலிருந்து குதித்து, அவளுக்கு உதவ ஓடினான். அவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவளை ஆறுதல்படுத்தினான். தீய சக்திகள் அனைத்தும் கோட்டையிலிருந்து வெளியேறி ஊர் முழுவதும் பரவியது.

அவள் அழுதுகொண்டு இருக்கும் போது, பண்டோராவும் எபிமீதியஸும் பெட்டியிலிருந்து வரும் ஒரு சிறிய குரலைக் கேட்டார்கள். 'என்னை வெளியே விடு!' என்னை வெளியே விடு!’ பெட்டிக்குள் இருந்து வெளியே வந்ததை விட மோசமானது எதுவும் இருக்க முடியாது என்று நம்பி, அவர்கள் மீண்டும் மூடியைத் திறந்தார்கள்.
பெட்டியின் மூலையில் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய நொறுங்கிய பட்டாம்பூச்சி மட்டுமே அதில் இருந்தது. அது மெதுவாக அதன் மின்னும் இறக்கைகளை விரித்து பண்டோராவின் மீது உரச, அவள் காயங்கள் ஆறின. அந்த அழகான பட்டாம்பூச்சி தான் நம்பிக்கை. தெய்வங்கள் என்ன சதி செய்கிறார்கள் என்பதை உணர்ந்த மெர்குரி, மனிதகுலத்தின் மேல் பரிதாபப்பட்டு, நம்பிக்கை என்ற அழகான பட்டாம்பூச்சியைத் தீமைகளுக்கு நடுவில் மறைத்து வைத்திருந்தார்.
Enjoyed this story?