*
ஒரு சமயத்தில் ஆற்றங்கரை ஓரமாக உள்ள ஒரு மரத்தில் குரங்கு ஒன்று வசித்து வந்தது. அந்த குரங்கு தனியாக வசித்து வந்தது மற்றும் அதற்கு நண்பர்களோ குடும்பத்தினரோ இல்லாமல் இருந்தது. ஆனாலும் அந்த குரங்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் இருந்தது. அந்த நாவல் மரத்தில் இனிப்பான நாவல் பழங்கள் கொத்து கொத்தாகக் காய்த்து அந்த குரங்கின் பசிக்கு விருந்தாக இருந்தது. மேலும் அந்த மரம் அந்த குரங்கை கடுமையான சூரிய ஒளியில் இருந்தும் கொட்டும் மழையில் இருந்தும் பாதுகாப்பு அளித்து வந்தது.
ஒரு நாள் ஒரு முதலை அந்த ஆற்றில் நீந்திக் கொண்டே வந்து ஓய்வெடுப்பதற்காக ஆற்றங்கரை மேட்டின் மீது ஏறி வந்தது.
குரங்கு ஒரு நட்பான விலங்கு என்பதால் அந்த முதலையை நட்பாகப் பார்த்து சிரித்தது.
அந்த முதலையும் ஆச்சரியத்துடன் பதிலுக்கு பேசத் தொடங்கியது. 'இங்கே எனது பசிக்கு ஏதேனும் உணவு கிடைக்குமா“ என்று முதலை கேட்டது.' 'எனக்கு இன்று இது வரை உணவே கிடைக்கவில்லை, எனக்கு மிகவும் பசிக்கிறது' என்றது.
நீங்கள் நினைப்பீர்கள், அந்த முதலை அந்த குரங்கைச் சாப்பிடத்தான் நினைக்கக்கூடும் என்று. இல்லை அந்த முதலை அன்பானது மற்றும் மெல்லிய மனம் கொண்டது, குரங்கைச் சாப்பிட வேண்டும் என்ற மனநிலையே அதனிடம் தோன்றவே இல்லை.
அந்த குரங்கும் கனிவுடன், 'எனது நாவல் மரத்தில் நிறைய பழங்கள் இருக்கின்றன. வேண்டுமானால் அவற்றில் சிலவற்றைச் சாப்பிட்டு பார்க்கிறாயா' என்று கேட்டது.
அந்த குரங்கு சில நாவல் பழங்களை முதலைக்கு அருகில் வீசியது. பொதுவாக முதலைகள் நாவல் பழங்களை உண்பது இல்லை என்றாலும் கூட, தனது பெரும் பசியைத் தணிப்பதற்காக அந்த நாவல்பழங்கள் அனைத்தையும் உண்டு களித்தது. பழங்களின் சுவை அந்த முதலைக்குப் பிடித்துப் போனது, அதன் நாக்கு கூட ஊதா நிறத்திற்கு மாறி விட்டது.
அந்த முதலை தனது வயிறு நிறைய நாவல் பழங்களைத் தின்று முடித்த பிறகு, அந்த குரங்கும், 'இனி பசித்தால் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வந்து என்னிடம் நாவல் பழங்களைப் பெற்றுக் கொள்' என்றது.
அதன் பிறகு அந்த முதலை தினந்தோறும் அந்த குரங்கைப் பார்க்க வரத் தொடங்கி விட்டது. அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக ஆகி விட்டனர். அவர்கள் பேசுவார்கள், தங்கள் தங்கள் கதைகளை மற்றவருக்குச் சொல்லிக் கொள்வார்கள். வழக்கம் போல இனிப்பான நாவல் பழங்களை ஒன்றாகவே உண்டு மகிழ்ந்தார்கள்.
ஒரு நாள் அந்த முதலை அந்த குரங்கிடம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பற்றி கூறியது.
உடனே குரங்கும், 'அப்படியா, நீ திரும்பிச் செல்லும் பொழுது உன் மனைவிக்கும் கொடுப்பதற்காக சிறிது நாவல் பழங்களைத் தருகிறேன்' என்றது.
முதலையின் மனைவியும் அந்த நாவல் பழங்களை ருசித்துச் சாப்பிட்டாள். அது வரை அந்த முதலையின் மனைவி அத்தனை சுவையான எதையும் சாப்பிட்டதில்லை. ஆனால் அந்த முதலையின் மனைவி தனது கணவனைப் போல அன்பானவளோ அல்லது மென்மையானவளோ கிடையாது.
அவள் தனது கணவனிடம் கூறினாள், 'இந்த இனிப்பான நாவல் பழங்களைத் தினந்தோறும் சாப்பிட்டு வரும் அந்த குரங்கின் ருசி எப்படி இனிப்பாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்'.
அன்பான உள்ளம் கொண்ட முதலை கணவனோ தனது மனைவிடம், 'அந்த குரங்கை எல்லாம் என்னால் கொன்று சாப்பிட முடியாது' என்று கூறி விட்டது.
'அந்த குரங்கு எனது மிகச் சிறந்த நண்பன்' என்றது.
முதலையின் பேராசை பிடித்த மனைவியோ அந்த பேச்சைக் கேட்கவில்லை. தனது பேச்சைத் தன் கணவன் கேட்டு நடக்க வேண்டும் என்பதற்காக தனக்கு சுகவீனம் இருப்பது போல நடிக்கத் தொடங்கினாள்.
'நான் செத்துக் கொண்டிருக்கிறேன். அந்த குரங்கின் சுவையான இதயம் மட்டுமே என் நோயைக் குணப்படுத்த முடியும்' என்று தனது கணவனிடம் கூறி அழத் தொடங்கினாள். 'என் மீது உனக்கு உண்மையான அன்பு இருந்தால் உனது குரங்கு நண்பனைப் பிடித்து வா, நான் அவனது இதயத்தைக் கடித்து உண்ண வேண்டும்' என்றாள்.
அந்த முதலைக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தனது குரங்கு நண்பனின் இதயத்தைச் சாப்பிடுவதற்கு அதன் இளகிய மனம் இடம் தரவில்லை. ஆனாலும் தனது மனைவியும் இறந்து விடக் கூடாது என்று கவலைப்பட்டது.
கடைசியில் தான் செய்ய வேண்டியது என்ன என்பதை அந்த முதலை முடிவு செய்து கொண்டது. அடுத்த முறை அந்த குரங்கு நண்பனைப் பார்க்கச் செல்லும் பொழுது தனது மனைவி, குரங்கு நண்பனான உன்னைப் பார்ப்பதற்காகவும் தனக்கு இனிப்பான நாவல் பழங்களை அளித்ததற்காக நன்றி கூறுவதற்காகவும் உன்னை வரச்சொல்லி அழைத்தாள் என்று குரங்கிடம் முதலை கூறியது.
குரங்கும் மிக்க மகிழ்ச்சி அடைந்து விட்டது. ஆனால் எனக்கு நீச்சல் தெரியாதே, என்னால் அங்கே வர முடியாதே என்றது.
முதலையோ, 'அதைப் பற்றி நீ கவலைப்படாதே. என் முதுகில் ஏறிக் கொள். நான் உன்னைக் கொண்டு செல்கிறேன்' என்றது.
குரங்கும் அதற்கு சம்மதித்து அந்த முதலையின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டது.
அந்த இரண்டு நண்பர்களும் அந்த ஆழமான, அகன்ற ஆற்றில் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் ஆற்றின் கரையையும் நாவல் மரத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது முதலை பேசத் தொடங்கியது, 'எனக்கு வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் என் மனைவி மிகவும் சுகவீனமாக இருக்கிறாள், தன்னைக் குணப்படுத்துவதற்கு அவளுக்கு உள்ள ஒரே வழி என்பது ஒரு குரங்கின் இதயத்தைச் சாப்பிடுவது தான் என்று அவள் கூறுகிறாள். என்ன செய்வது, உன்னைக் கொன்று தின்பதைத் தவிர வேறு வழியே இல்லை. இனி உன்னோடு பேசி மகிழக் கூட முடியாது'.
ஆனால் அந்த குரங்கோ விரைவாக சிந்தித்து பேசத் தொடங்கியது, 'நண்பா, உன் மனைவியின் சுகவீனத்தை அறிந்து எனக்கும் கவலையாகத் தான் இருக்கிறது. அவளுக்கு உதவி செய்ய எனக்கும் ஆசை தான், ஆனால் என் இதயத்தை மறந்து போய் அந்த நாவல் மரத்திலேயே வைத்து விட்டு வந்து விட்டேனே. நாம் திரும்பவும் அந்த மரத்திற்குச் சென்று இதயத்தை எடுத்து வந்து விடலாமா?'.
முதலையும் குரங்கின் வார்த்தையை நம்பி விட்டது. நீந்தும் திசையை மாற்றி மறுபடியும் அந்த நாவல் மரத்தை நோக்கிச் சென்றது. சட்டென்று குரங்கு தாவிச் சென்று மரத்தின் உச்சிக்கு சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு விட்டது.
குரங்கு பேசத் தொடங்கியது, 'உன்னை என் நண்பன் என்று நான் நினைத்தேன். நாம் நமது இதயத்தை உடலுக்குள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் தான் நடமாடிக் கொண்டிருக்கிறோம் என்ற சின்ன விஷயம் கூட உனக்குத் தெரியாதா? உன்னை இனி நான் ஒருபொழுதும் நம்ப மாட்டேன், இந்த மரத்தில் இருந்து பழங்களையும் பறித்துத் தர மாட்டேன். போய்த்தொலை, திரும்பவும் இங்கே வந்து விடாதே'.
முதலை முட்டாளாக மாறியதை உணர்ந்தது. ஒரு நல்ல நண்பனையும் இனிய, சுவையான நாவல் பழங்கள் கிடைப்பதையும் இழந்து விட்டேனே என வருத்தப்பட்டது. அந்த குரங்கு சாதுர்யமாகவும் துரிதமாகவும் சிந்தித்த காரணத்தால் தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. அன்றிலிருந்து அந்த குரங்கு திரும்பவும் முதலைகளையே நம்புவது கிடையாது.
Enjoyed this story?