*
மஹாபிஸ் இரு அணிகளுக்கு இடையே விளையாடும் ஒரு விளையாட்டு. ஒரு அணியின் தோழர்கள், ஒரு போர்வைக்கு கீழே தங்களின் கைகளை வைத்து மறைத்துக்கொண்டு, யாராவது ஒரு தோழரின் உள்ளங்கைக்குள் ஒரு மோதிரத்தை மறைத்து வைப்பார்கள். பின்னர் அவர்கள் எதிரணியினரிடம் தங்கள் மூடிய கைகளைக் காட்டுவார்கள். அந்த எதிரணியினர் மோதிரம் மறைந்திருக்கும் கையை யூகித்துக் கண்டுபிடிக்க வேண்டும்.
*
ஒரு எறும்பும், ஒரு யானையும் உண்மையில் மிக நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். அவர்களுக்கு வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் ஒன்றாக
சேர்ந்து விளையாடினார்கள். பிரச்சனை என்னவென்றால், யானையின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். அப்பாவுக்கு மகன் வீட்டுப் பாடம் படிக்காமலும் அல்லது அவன் அம்மாவுக்கு உதவியாக வேலை செய்யாமலும் விளையாடப் போவது
பிடிக்கவில்லை. மேலும், அவருக்கு மற்ற யானைகளுடன் பெருமையாக விளையாடாமல், போயும்போயும் ஒரு எறும்புடன் தன் மகன்
விளையாடுவது சுத்தமாய் பிடிக்கவில்லை.
குட்டி யானைக்கு தன் அப்பா கோபமாக இருக்கும்போது அவர் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. ஆனால் எறும்போ பயங்கரமான தைரியசாலி. அது அந்த கிழட்டு யானையைக் கண்டெல்லாம் பயப்படுவதில்லை.
ஒரு நாள், அவர்கள் இருவரும் மாஹாபிஸ்* கேம் விளையாடும்போது, கோபக் குரலில் கத்தியபடி தந்தை யானை அவர்களை நோக்கி வந்தது. அப்போது பூமியே அதிர்ந்தது. மரங்கள் அங்குமிங்கும் ஆடின.
'ஐயோ கடவுளே! என் அப்பா வருகிறார்!' இளம் யானை, அப்பாவின் கோபமான முகத்தைப் பார்த்து பயந்து நடுங்கியது. 'இப்போது என்னால் என்ன செய்ய முடியும்?'
சிறிய எறும்போ தன் மார்பை நிமிர்த்தி தன் முழு உயரத்துக்கு எழுந்து நின்றது! 'கவலைப்பட வேண்டாம் நண்பா... நீ என் பின்னால் மறைந்துகொள்! அதன்பிறகு உன் அப்பாவால் உன்னைக் கண்டுபிடிக்க முடியாது!' என்றது எறும்பு!
Enjoyed this story?