KidsOut World Stories

டிக் வ்ஹீட்டிங்க்டோன் அண்ட் ஹிஸ் கேட்    
Previous page
Next page

டிக் வ்ஹீட்டிங்க்டோன் அண்ட் ஹிஸ் கேட்

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

டிக் வ்ஹீட்டிங்க்டோன் அண்ட் ஹிஸ் கேட்

 

 

 

 

 

 

*

நீண்ட காலத்துக்கு முன்பு டிக் விட்டிங்டன் என்ற சிறுவன் வசித்து வந்தான். அவனுக்குக் அப்பாவும் கிடையாது, அம்மாவும் கிடையாது. அவனுக்குச் சோறு போட ஆளே இல்லை, அதனால் அவன் அடிக்கடி பசியால் வாடினான். அவன் வசித்து வந்த ஊர் ஒரு குக்கிராமம். அங்கிருந்து தொலைவில் லண்டன் என்ற நகரம் இருப்பது பற்றியும், அங்கு எல்லோரும் பணக்காரர்களாக இருப்பது பற்றியும், அங்குள்ள தெருக்களில் தங்கத்தால் ஆன நடைபாதைகள் இருப்பது பற்றியும் அவனுக்கு நிறையக் கதைகள் சொல்லப்பட்டன.

டிக் விட்டிங்டன் அங்கு போய், அங்குள்ள தெருக்களில் இருந்து போதுமான தங்கம் தோண்டியெடுத்து பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்று உறுதிபூண்டான். ஒரு நாள் அவன் ஒரு வண்டிக்காரனைச் சந்தித்தான். அவன் லண்டனுக்குப் போய்க்கொண்டிருந்தான். அவன் டிக்-ஐ தன் வண்டியில் இலவசமாக ஏற்றிக்கொண்டான். இருவரும் லண்டனை நோக்கிச் சென்றார்கள். அந்தப் பெரிய நகரத்தை அடைந்தபோது, டிக்-ஆல் தன் கண்களையே நம்ப முடியவில்லை. குதிரைகள், வண்டிகள், நூற்றுக்கணக்கான மக்கள், பெரிய உயரமான கட்டிடங்கள், நிறைய சேறு-சகதிகள் எல்லாம் இருந்தன. ஆனால், அவனால் எங்கும் தங்கத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. என்ன ஒரு ஏமாற்றம், எப்படி அவன் பணக்காரன் ஆவது? எப்படி அவனுக்கு இங்கு சாப்பாடு கிடைக்கும்?

ஒரு சில நாட்களுக்குப் பிறகு, அவன் ஒரு பணக்கார வியாபாரியின் வீட்டு வாசலில் இருந்த குப்பைமேட்டில் பசி தாங்காமல் மயங்கி விழுந்தான். அந்த வீட்டிலிருந்து ஒரு சமையல்காரி வெளியே வந்தாள்:

"ஓடிப்போ...” என்று கத்திய அவள், "அழுக்குப் பிடித்தவனே" என்றும் கூச்சலிட்டாள். அவள் தன் விளக்கமாற்றால் அவனைத் தள்ள முயன்றாள்.

அந்த நேரத்தில் வியாபாரி தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் அனபானவர் என்பதால், அப்பாவி சிறுவன் டிக் மீது கருணை காட்டினார்.

"வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போ" அவர் தனது சமையல்காரிக்கு உத்தரவிட்டார்.

*

சாப்பிட்டு ஓய்வெடுத்த பிறகு, டிக்குக்கு சமையலறையில் வேலை வழங்கப்பட்டது. டிக் எப்போதும் அந்த வணிகர் மீது அதிக மரியாதை வைத்திருந்தான். ஆனால், சமையல்காரி மோசமானவள் என்பதால், யாரும் பார்க்காதபோது அவனை அடிப்பதும் கிள்ளுவதுமாக இருந்தாள்.

டிக்குக்கு இன்னொரு வருத்தமும் இருந்தது. அவன் மொட்டை மாடியின் மூலையில் இருந்த ஒரு சிறிய அறையில்தான் தூங்க வேண்டும். அப்போது எலிகளும் சுண்டெலிகளும் அவன் முகத்தின் மேலேறி ஓடியதோடு, அவன் மூக்கையும் அவ்வப்போது கடித்து வைத்தன.

அவன் எப்படியோ தன் வேலைக்கு சம்பளமாக கிடைக்கும் அனைத்து சில்லறைகளையும் சேமித்து வைத்து ஒரு பூனையை வாங்கிவிட்டான். பூனை சரியான சுட்டிப் பூனை. இந்த லண்டன் முழுக்க இப்படி ஒரு சாதுர்யமானப் பூனையைப் பார்க்கவே முடியாது. சுண்டெலிகள், எலிகள் எல்லாவற்றையும் அது ‘அபக்’கென்று பிடித்து ‘லபக்’கென்று விழுங்கிவிடும். ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, டிக்கின் வாழ்க்கை அருமையாக கழிந்தது. ஏனெனில், எலிகள் சுண்டெலிகள் எல்லாவற்றையும் அவன் செல்லப் பூனை பிடித்துச் சாப்பிட்டு விட்டதால், அவனால் அமைதியாகத் தூங்க முடிந்தது.

கொஞ்சநாள் கழித்து, தன் கப்பல் வெளிநாடு போகிறது என்றும், எதையாவது விற்க நினைப்பவர்கள், அதை தன் கப்பலுக்கு அனுப்பலாம் என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் வணிகர் சொல்லிக்கொண்டிருந்தார். கப்பல் உலகின் இன்னொரு மூலைக்கு ஒரு நீண்ட பிரயாணம் போகப்போகிறது என்பதால், அவர்கள் கொடுக்கும் பொருட்கள் அனைத்தையும் கப்பல் கேப்டன் ஏதோ ஒரு நாட்டில் விற்றுப் பணமாக்கி விடுவார் என்றும், அதனால் அனைவரும் பணம் சம்பாதிக்கலாம் என்றும் சொன்னார் வணிகர். பாவம், டிக்-ஆல் எதை விற்கமுடியும்?

திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

உடனே, "ஐயா, நீங்கள் என் பூனையை எடுத்துக்கொண்டு போய் விற்கமுடியுமா?" என்று வணிகரைப் பார்த்துக் கேட்டான்.

அனைவரும் சிரித்தார்கள்.

 

ஆனால், வணிகரோ புன்முறுவல் பூத்தபடி கூறினார்:

"நிச்சயமாக விற்றுத் தருகிறேன் டிக், பூனையை விற்பனை செய்தால் அதில் வரும் எல்லாப் பணமும் உனக்குத்தான்".

வணிகர் லண்டன் நகரத்தை விட்டு வெளிநாட்டுக்குப் போனபிறகு, டிக் பூனையின் உதவியில்லாமல் தன் சின்ன அறையில் தனியாகத் தூங்கினான். இரவு முழுக்க சுண்டெலிகளும் எலிகளும் அவன் மீது ஊர்ந்தன. பகல் முழுக்க சமையல்காரி இன்னும் மோசமாகத் திட்டிக்கொண்டே இருந்தாள். ஏனென்றால், அவளைத் தட்டிக்கேட்க அங்கு யாருமில்லை. எனவே, டிக் அந்த வீட்டைவிட்டு ஓடிவிடுவதென முடிவுசெய்தான்.

அவன் வீட்டைவிட்டு ஓடும்போது, எல்லா தேவாலயங்களிலும் இருந்து ஒரே நேரத்தில் மணிகள் ஒலித்தன. அதன் ஓசை, கீழ்க்கண்டவாறு சொல்வதுபோல் அவனுக்குத் தோன்றியது.

வீட்டுக்குத் திரும்பு டிக் விட்டிங்டன்
மூன்று முறை லண்டனுக்கு நீதான் லார்டு மேயர்

“இது கடவுளின் தாராள மனம், கருணை, கடவுளே..." டிக் திகைத்து நின்றான். “நான் மேயர் ஆகப் போகிறேன் என்றால், இங்கேயே இருப்பதுதானே நல்லது. நான் சமையல்காரியின் கொடுமைகளையும், என்னை நோகடிக்கும் சுண்டெலிகள், எலிகள் ஆகியவற்றின் தொல்லையையும் நிச்சயம் சகித்துக்கொள்வேன்! மேயர் ஆன பிறகு, நான் யாரென்று காட்டுகிறேன், இந்த மோசமான சமையல்காரிக்கு."

*

எனவே அவன் மீண்டும் வணிகர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றான்.

உலகின் மற்ற மூலையில் இருந்த ஒரு நாட்டுக்கு கப்பலோடு போய்ச்சேர்ந்தார் வணிகர். வணிகருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், அந்த நாட்டு ராஜாவுக்கும், ராணிக்கும் ஏதாவது பரிசுகொடுக்க நினைத்தார் வணிகர். வணிகர் கொடுத்த பரிசால் ராஜாவும், ராணியும் மகிழ்ந்து அவருக்கு ஒரு விருந்தளிக்க ஏற்பாடு செய்தார்கள். விருந்துக்காக விதவிதமான உணவுகளைத் தயார்செய்து வைத்துவிட்டு எல்லோரும் வணிகரின் வருகைக்காக காத்திருந்தனர்.

அப்போது நூற்றுக்கணக்கான எலிகள் எங்கிருந்தோ மாயமாய் வந்து விருந்துக்கான உணவுகளை எல்லாம் தின்று காலிசெய்துவிட்டன.

 

வணிகர் அப்போது அங்கு வந்தார். அவரிடம் ராஜா, “என் அன்புக்குரிய வணிகரே, அடிக்கடி இப்படித்தான் ஆகிறது. நல்ல விருந்தை ஒருமுறைகூட இந்த எலிகள் சாப்பிட விடுவதே இல்லை. இதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.
"கணம் பொருந்திய ராஜா! என்னிடம் இதற்கு ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. நான் லண்டனிலிருந்து வரும்போது ஒரு அருமையான பூனையோடுதான் வந்தேன். எலிகள் வந்து உங்கள் விருந்தை விழுங்கும் முன்பாக, என் பூனை எலிகளை அனைத்தையும் விழுங்கிவிடும்" என்று கூறினார்.

உடனே ராஜாவும், ராணியும் மகிழ்ச்சியடைந்து, அந்தப் பூனையைக் கொண்டு வரச்செய்து, மீண்டும் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது, அந்த விருந்தை உண்ண எலிகள் வந்தன. அங்கு காத்திருந்த பூனை, மின்னல்போலப் பாய்ந்து எல்லா எலிகளையும் கொன்று விழுங்கியது.

அதைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடிய ராஜாவும் ராணியும், இப்படி ஒரு அருமையான பூனையைக் கொடுத்ததற்காக கப்பலே நிரம்பும் அளவுக்கு நிறையப் பொற்காசுகளை வணிகரிடம் பரிசாக கொடுத்தனர்.

கப்பல் லண்டனுக்குத் திரும்பியபோது, வியாபாரி டிக்-இன் பூனைக்கு ராஜா கொடுத்த எல்லா பொற்காசுகளையும் அவனிடமே கொடுத்தார். டிக் பெரிய பண்காரன் ஆனான்! அடுத்த பல ஆண்டுகளுக்கு அவன் தன் பணத்தை நல்ல விதமாக செலவுசெய்து, தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும், தனக்காக வேலை செய்யும் பணியாளர்களுக்கும் நற்பணிகளைச் செய்து வந்தான். அதனால், பின்னாளில் லண்டன் மாநகரின் மேயராக அவன் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டான்.

ஆனால் டிக் தனது அன்பான வழிகாட்டியான வணிகரை எப்போதும் மறக்கவில்லை. பூனையை விற்று, பணம் எதையும் தான் வைத்துக் கொள்ளாமல், எல்லா பணத்தையும் கொடுத்து மிகவும் நேர்மையாக நடந்து கொண்ட வணிகரை எப்படி மறக்க முடியும்? டிக் வளர்ந்து அழகான இளைஞனாக மாறி, வியாபாரியின் அழகான மகள் அலைஸைக் காதலித்து, அவளையே திருமணம் செய்துகொண்டான். அதன் பிறகு, அவர்கள் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள், எல்லா கதைகளிலும் வருவதுபோல.

வீட்டுக்குத் திரும்பு டிக் விட்டிங்டன்
மூன்று முறை லண்டனுக்கு நீதான் லார்டு மேயர்

தேவாலய மணிகளின் கூட்டுக் குரல்கள் உண்மையாகி விட்டன பார்த்தீர்களா?

Enjoyed this story?
Find out more here