ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் ஓர் சொல்கதை
*
வெகு காலத்திற்கு முன்பு, கனவுக் காலத்தில் பூர்வகுடிகள் ஒரு குழு வேட்டைக்காக வெளியே சென்றனர். பல மணி நேரம் கழித்து, அவர்கள் சோர்ந்துவிட்டதால் ஓய்வெடுக்க முடிவுசெய்து, கதைகளைச் சொல்லிக்கொண்டும், தங்கள் கைகளை தீக்கு அருகில் காட்டி வெப்பப்படுத்திக் கொண்டும் இருக்கும்போது, அவர்களில் ஒருவன் கண்களை மேலே உயர்த்திப் பார்த்தான்.
அவன் பார்த்தது, ஒரு வானவில் – அது ஒரு அழகான பல வர்ண வளைவாக அந்த அடிவானத்தில் கம்பீரமாகத் தோன்றியது. ஆனால் பூர்வீக குடிகள், அது ஒரு குளத்திலிருந்து இன்னொரு குளத்துக்கு நகரும் சர்ப்பம் என்று நினைத்து, அது அவர்களின் முகாமுக்கு அருகில் வந்திருப்பதை எண்ணிப் பயந்தார்கள்.
ஆனால், அது தங்கள் சொந்தக் குளத்துக்கு வருவதாகத் தெரியவில்லை என்பதால், அதற்கு நன்றி கூறினர்.
ஒரு இளம் மனிதன், வீடு திரும்பிய பிறகு, வானவில் சர்ப்பம் பற்றி மேலும் அறிய விரும்பி, வேட்டைக்காரர்கள் வானவில் சர்ப்பத்தைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று பழங்குடி முதியவர்களிடம் கேட்டான்.
அதற்கு அவர்கள் வானவில் சர்ப்பம், இந்தப் பூமிக்கு ஒரு வடிவத்தைக் கொண்டு வந்த கனாக் காலத்து உயிரினங்களில் ஒன்றாகும் என்றனர். ஆரம்பத்தில் பூமி தட்டையாக இருந்தது. வானவில் சர்ப்பம் தான் நிலம் முழுவதும் புரண்டு, அங்கெல்லாம் பள்ளங்களை தன் உடல் இயக்கம் மூலம் ஏற்படுத்தி, மலைகளையும், ஆறுகள் பாயும் பள்ளத்தாக்குகளையும் உருவாக்கியது.
வானவில் சர்ப்பம் தான் கனாக் காலத்தின் மிகப்பெரிய உருவமாக அமைந்தது. அதன் வடிவம், மற்ற கனாக் கால உயிரினங்களை எல்லாம் பயமுறுத்தியது.
கடைசியாக, பூமியை வடிவமைக்கும் முயற்சியில் மிகவும் சோர்வாக ஆகி, வானவில் சர்ப்பம் ஒரு பெரிய ஆழமான குளத்தின் குளிர்ந்த நீருக்குள் புகுந்து தன்னை அமைதிப்படுத்திக் கொண்டது. அத்துடன் அதன் உடலில் இருந்த பிரகாசமான வண்ணங்களும் கொஞ்சம் தணிந்து மிதமான வண்ணங்களாக மாறின. ஒவ்வொரு முறையும் விலங்குகள் குளங்குட்டைகளில் தண்ணீர் குடிக்கச் செல்லும்போது, அந்த நீர் நிலைகளை அவை தொந்தரவு செய்யாமல், மிகவும் மெதுவாகவும், கவனமாகவும் நீரை அருந்துகின்றன.
அந்த விலங்குகளால் வானவில் சர்ப்பம் அந்தக் குளத்துக்குள் இருப்பதைப் பார்க்க முடியவில்லை என்றாலும், அது அங்கு ஒளிந்திருப்பது அவற்றுக்குத் தெரியும். இந்த வானவில் சர்ப்பம் கடுமையான மழையும் புயலும் தாக்கி குளம் அலைபாய்ந்தால் மட்டுமே, வெளியே வரும். அந்தச் சர்ப்பத்தின் வண்ண மயமான உடலைச் சூரியன் தொடும்போதும், அது வெளியில் வரும்.
பின்னர் அது அந்த குளத்தில் இருந்து மேலே எழும்பி, மர உச்சிகளைக் கடந்து, மேகங்களுக்குள் ஊடுருவிச் சென்று, சமவெளியில் பயணித்து, பிறகு இன்னொரு ஆழாமான குளத்துக்குச் சென்று, அதன் அடியாளத்தில் அமைதியாக வசித்துவரும்.
ஒருவேளை அது கோபமடைந்து பூமிக்கு வந்து ஆபத்தை விளைவித்து விடுமோ என்று பயந்துதான், அது தனது புதிய குளத்திற்குள் புகும் வரை, இங்குள்ள பூர்வகுடி மக்கள் எல்லாரும் சத்தமில்லாமல், மிகவும் அமைதியாக இருந்து வருகின்றனர். இன்னொரு குளத்தின் நீருக்கு அடியில் புகுந்தபிறகு, அந்த வானவில் சர்ப்பத்தை யாரும் எளிதில் காணமுடியாது.
அதனால்தான், பூர்வகுடி மக்கள் ஒரு குளத்திலிருந்து இன்னொரு குளத்தை நோக்கிச் செல்லும் வானவில் சர்ப்பத்தை எந்த தொந்தரவும் செய்யாமல், அது வானில் எழும்பி வரும்போது அமைதியாகவும், கவனமாகவும் இருக்கிறார்கள்.
Enjoyed this story?