ஜோஹாவும் அவனது கழுதையும்
A free resource from
KidsOut - the fun and happiness charity
This story is available in:
This story is available in:
ஒரு சவுதி அரேபியக் கதை

*
ஒரு நாள் ஜோஹா தனது கழுதை மீது ஏறிக் கொண்டு சந்தைக்கு சென்று கொண்டிருந்தான். ஜோஹாவின் மகன் அந்த கழுதைக்குப் பக்கத்தில், கழுதையின் கடிவாளங்களைப் பிடித்தவாறு தனது தந்தையுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தான்.
அந்த தந்தையும் மகனும் நடந்து செல்லும் பொழுது சாலையோரம் கூடியிருந்த ஒரு சிறு மக்கள் குழுவினர் ஜோஹாவைக் குற்றம் கூறினார்கள்.
அவர்கள் ஜோஹாவிடம், 'ஜோஹா, ஏன் இப்படி இரக்கம் இல்லாமல் இருக்கிறாய்? உன் மகன் உனக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது நீ மட்டும் சொகுசாக கழுதை மீது அமர்ந்து செல்கிறாயே' என்றனர்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட ஜோஹாவும் சட்டென்று கீழே இறங்கி விட்டு தனது மகனை அந்த கழுதை மீது அமரச் செய்து விட்டான்.

ஜோஹாவும் அவனது மகனும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். கழுதைக்குப் பக்கத்தில், கழுதையின் கடிவாளங்களைப் பிடித்தவாறு ஜோஹா சந்தையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
ஜோஹாவும் அவரது மகனும் அந்த சாலையில் ஒரு மைல் தூரம் நடந்திருப்பார்கள். அப்பொழுது ஒரு கிணற்றைச் சுற்றிலும் பெண்கள் ஒரு குழுவாக நின்றிருந்தார்கள்.
அந்த பெண்கள் அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தது போல பேசிக் கொண்டார்கள். 'பார்த்தீர்களா, இப்படியா? ஒரு முதிய மனிதர் நடந்து வருகிறார், அவரது மகனோ கழுதையின் மீது ஏறி சொகுசாக வருகிறான். நிச்சயமாக இது சரியில்லை தானே!' என்றார்கள்.
அதைக் கேட்டு ஜோஹா திரும்பவும் அந்த கழுதையின் மீது ஏறி தன் மகனுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டார். தந்தையும் மகனும் தொடர்ந்து பயணம் செய்தனர்.
மதியமாகி விட்டதால் உச்சி வெயில் கொளுத்தியது. வெப்பம் அனலாக கொதித்தது. ஆனால் இன்னமும் ஜோஹாவும் அவரது மகனும் கழுதை மீது அமர்ந்தவாறே சந்தையை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
ஜோஹாவும் அவரது மகனும் கழுதை மீது ஏறி பயணம் செய்த காரணத்தால் அந்த எடையைத் தாங்காமல் கழுதை மிக மெதுவாக நடந்து வந்தது. சந்தை நடக்கும் இடம் ஊருக்கு சற்று வெளியே இருந்தது. அதற்கருகில் ஒரு மக்கள் குழுவினர் அமர்ந்து இருந்தார்கள். ஜோஹாவும் அவரது மகனும் இருவருமே கழுதை மீது ஏறி பயணம் செய்து வரும் காட்சியைக் கண்டு அதை மற்றவர்களுக்கு காண்பித்தார்கள். அந்த கழுதை எடை தாங்காமல் மிக மெதுவாக நடப்பதைக் கண்டு தங்கள் அதிருப்தியைக் காட்டிக் கொண்டார்கள்.
அவர்கள் ஜோஹாவிடம், 'ஒரு சின்ன கழுதை மீது ஏன் இப்படி நீங்கள் இருவரும் ஏறி பயணம் செய்கிறீர்கள்?' 'நீங்கள் இருவரும் சேர்ந்து மிகவும் அதிக எடையுடன் இருக்கிறீர்கள், உங்கள் கழுதையால் உங்களது எடையைத் தாங்கிக் கொள்ள முடியுமா?' என்றனர்.
ஜோஹா தனது மகனிடம், 'நாம் இருவருமே கழுதை மீது இருந்து இறங்கி நடப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்' என்றார். 'அப்படியானால் தான் இனிமேல் யாரும் நம்மிடம் எதையும் குறை கூற முடியாது.'
எனவே ஜோஹாவும் அவரது மகனும் கழுதை மீது இருந்து இறங்கிக் கொண்டார்கள். அந்த கழுதையை வழி நடத்துவதற்காக அதன் கடிவாளங்களை ஜோஹா பிடித்துக் கொண்டு சந்தையை நோக்கி இருவரும் நடந்தே சென்றனர்.
ஆனால் அவர்கள் சந்தையை அடைந்த பொழுது கூடியிருந்த மக்கள் பலரும் அவர்களைப் பார்த்து சிரித்தார்கள், ஜோஹாவைக் கேலி செய்தார்கள்.
'என்ன முட்டாள் இவர்' என்று அந்த கூட்டத்தினர் கூறினார்கள். 'சொந்தமாக ஒரு கழுதை இருக்கும் பொழுது கூட தனது மகனை கழுதை மீது ஏறிப் பயணம் செய்ய வைக்காமல் நடக்கச் செய்திருக்கிறார்?' என்றார்கள்.
ஜோஹாவுக்கு அந்த மக்கள் மீது கோபம் வரவில்லை. ஏன் என்றால் எல்லா நேரத்திலும் எல்லா மக்களையும் திருப்தி செய்ய இயலாது என்பதை அவர் இப்பொழுது அறிந்து கொண்டு விட்டார். ஒருவன் தனது சொந்த வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அவனே முடிவு செய்வது தான் மிகவும் சிறந்தது என்பதைப் புரிந்து கொண்டார்.
Enjoyed this story?