KidsOut World Stories

ஒரு சிறந்த நண்பன் Noel White    
Previous page
Next page

ஒரு சிறந்த நண்பன்

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

ஒரு சிறந்த நண்பன்

ஒரு ஆங்கிலக் கதை

 

 

 

 

 

*

யாசின் ஒரு சிறு பையனாக இருக்கும் பொழுது அவனது குடும்பத்தினர் ஈராக்கில் இருந்து இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார்கள். சமர்ராவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு யாசின் விரும்பவில்லை. ஆனால் அவனது தந்தையோ, இனிமேல் அந்த இடத்தில் வசிப்பது பாதுகாப்பானது அல்ல என்று கூறி விட்டார். மக்கள் அனைவரையும் சமமாக ஏற்றுக் கொள்கின்ற ஒரு நாட்டில் யாசின் வளர வேண்டும் என்று அவர் விரும்பினார். 'இங்கிலாந்து நாடு பல வகை கலாச்சார மக்கள் கொண்ட நாடு என்றும் அங்கே மக்கள் எந்த இனமானாலும் சரி, எந்த மத நம்பிக்கை கொண்டிருந்தாலும் சரி, ஒன்றாக இணைந்து பணியாற்றுகிறார்கள்' என்று யாசினின் தந்தை தனது மகனிடம் கூறினார்.

ஈராக் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு யாசின் விரும்பா விட்டாலும் கூட, லண்டன் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய நகரத்தில் அவர்கள் விரைவில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கி விட்டார்கள். லண்டன் நகரத்தில் உயரமான கட்டிடங்களும் அருங்காட்சியகங்களும் நிறைந்து வியப்பை அளிப்பதாக இருந்தது. லண்டன் நகரத்து கோளரங்கம் மற்றும் தேம்ஸ் நதியும் அதன் பழைய பாலங்களும் யாசினுக்கு வியப்பை அளித்து ரசிக்கும்படியாக இருந்தன.

யாசின் தனது வீட்டிற்கு அருகே வசித்து வந்த ஒரு சிறுவனுடன் சிநேகம் பிடித்துக் கொண்டான். அவனது பெயர் ஆன்ட்ரு என்பதாகும். கோடைக்காலம் முழுவதும் யாசினும் ஆன்ட்ருவும் பூங்காக்களில் விளையாடினார்கள். ஆன்ட்ருவின் தாயுடன் நகரில் இருந்த மிருகக் காட்சிசாலைக்குச் சென்றார்கள். ஆன்ட்ரு தனது பொம்மைகளையும் கதைப் புத்தகங்களையும் யாசினுடன் பகிர்ந்து கொண்டான். தனக்குப் பிடித்த கதை நாயகர்கள் பற்றி பேசினான். யாசினின் வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஒரு கூடாரத்தைக் கூட அமைத்துக் கொண்டு பெரியவர்களிடம் இருந்து ஒளிந்து கொண்டார்கள்.

கோடைக்காலம் முழுவதும் கொண்டாட்டமாக இருந்தது. லண்டன் நகரம் மிகப் பெரிய நகரமாகவும் சமர்ரா நகரைப் போல சூரிய ஒளியுடன் கூடிய வெப்ப நகராகவும் இல்லாமல் இருந்தாலும் கூட யாசினுக்கு சொந்த நாட்டைப் போல பிடித்துப் போய் விட்டது. அவனது ஆங்கில மொழித்திறனும் மேம்படைந்து விட்டது. குறிப்பாக ஆன்ட்ருவின் உதவியால் அது சாத்தியமானது. இருந்தாலும் நிறைய வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தான் நினைப்பதை எல்லாம் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியவில்லையே என்றும் முட்டாளாக இருக்கிறோமே என்றும் தன் மீதே வருத்தப்பட்டான்.

இறுதியில் செப்டம்பர் மாதமும் வந்தது, மரங்களில் இருந்து இலைகள் உதிரத் தொடங்கின. யாசினின் தந்தை அவனிடம் இனி நீ பள்ளிக்குச் செல்ல வேண்டும், அதற்குறிய காலம் வந்து விட்டது என்று கூறினார். யாசினுக்கு வயது ஏழு என்பதால் அவன் உள்ளூரில் இருந்த ஆரம்ப நிலை பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்புக்குச் சென்றான்-அவனது நண்பனான ஆன்ட்ரு சென்ற அதே வருடத்தில் தான்!

யாசின் பள்ளிக்குச் செல்வது பற்றி மிகவும் பதற்றத்தோடு இருந்தான். ஆனால் அவனது தந்தையும் தாயும் அவனிடம், ‘பள்ளிக்கூடம் என்பது உனக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கும் அங்கே உனக்கு புதிய நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். புதுப்புது விஷயங்களை நீ கற்றுக் கொள்ளலாம்’ என்றார்கள்.

‘ஆங்கிலப் பள்ளிகள் மிகவும் சிறப்பாக இருக்குமாம்’ என்று யாசினின் தாய் கூறினார்.

‘உனது ஆங்கிலத் திறன் விரைவில் சிறப்படைந்து விடும்’ என்று அவனது தந்தை ஆறுதல் அளித்தார்.

யாசினுக்கு இன்னமும் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அவனது நண்பன் ஆன்ட்ரு அவர்கள் வீட்டு கதவைத் தட்டியவாறே உள்ளே நுழைந்து அவனிடம் பள்ளிக்கூடம் எப்படி அவனுக்கு வேடிக்கையாக இருக்கப் போகிறது என்பதைப் புன்னகையுடன் விளக்கினான். யாசின் தன் நண்பனை நம்பிய காரணத்தால், மனதில் மிகவும் தெளிவு அடைந்தான்.

பள்ளிக்குச் செல்லும் வரையில் அந்த இரண்டு சிறுவர்களும் பேசிக் கொண்டே நடந்தார்கள். ஆன்ட்ரு யாசினிடம் பள்ளியின் விளையாட்டு மைதானம் பற்றியும், அந்த பள்ளியில் சிறப்பான ஆசிரியர் யார் என்பதையும், எந்த பையன்கள் மிகவும் வேடிக்கையானவர்கள் என்பதையும், எந்த சிறுமிகள் அழகாக இருப்பார்கள் என்பதையும் கதை கதையாக கூறினான். மதிய உணவு நேரங்களில் பள்ளியில் வழங்கப்படும் கஸ்டர்ட் என்னும் முட்டையும் பாலும் கலந்த தின்பண்டம் பற்றியும் கூறினான். யாசினுக்கு கஸ்டர்ட் என்றால் என்ன என்பது புரியவில்லை. ஆனாலும் அது பற்றி தன் நண்பன் ஆன்ட்ரு வியப்பாக கூறுவதால் அது மிகவும் சுவையாக இருக்கக்கூடும் என்று யாசின் நினைத்துக் கொண்டான்.

ஆனால் அவர்கள் இருவரும் வகுப்புக்குச் சென்ற பொழுது யாசின் நினைத்தது போல அது எளிதாக இல்லை. ஆன்ட்ருவிடம் அந்த ஆசிரியை வகுப்பின் முன்புறத்தில் உள்ள ஒரு இருக்கையில் அமரச் சொல்லி விட்டார். அந்த ஆசிரியை யாசினை அந்த வகுப்பு குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வகுப்பின் எதிரே நின்று கொண்டிருப்பது யாசினுக்கு பிடிக்கவில்லை. ஒரு மாணவன் யாசினை துர்நாற்றமடிக்கும் வெளிநாட்டுப் பையன் என கேலி செய்தான். வகுப்பில் இருந்த சிறுவர்களும் சிறுமிகளும் கேலியாகச் சிரித்தார்கள். யாசினிடம் அவனது பெயர் மற்றும் அவன் எங்கிருந்து வருகிறான் என்று கேட்ட பொழுது யாசின் ஆங்கிலத்தில் பதில் கூறிய பொழுது அவனது ஆங்கில உச்சரிப்பை ஒரு பையன் கிண்டலடித்தான்.

அந்த குறும்புக்கார சிறுவன், ‘இவன் பேசுவது எனக்குப் புரியவில்லை மிஸ், இவனுக்கு ஆங்கிலம் கூட பேசத் தெரியவில்லை’ என்றான்.

இறுதியாக அந்த வகுப்பில் இருந்து கடைசி வரிசையில் உள்ள ஒரு இருக்கையில் யாசினுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தனியாக இருப்பதாகத் தோன்றியதால், ஆன்ட்ருவுடன் அமரச் செய்தால் நன்றாக இருக்குமே என்று யாசினுக்குத் தோன்றியது. அவனுக்கு முன்பாக அமர்ந்துள்ள ஒரு சிறுமி யாசினை வினோதமாகப் பார்த்தாள். அது யாசினுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. பாடம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த சிறுமி தனது கையை உயர்த்தினாள். தான் இடம் மாறிக் கொள்ளலாமா என்று ஆசிரியையிடம் வேண்டிக் கொண்டாள். அந்த சிறுமிக்கு உறுத்தும் வகையில் தான் என்ன செய்து விட்டோம் என்று யாசினுக்குப் புரியவில்லை.

பள்ளியின் மணி அடித்தது, விளையாடும் மைதானத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. வகுப்பில் இருந்து அனைத்து குழந்தைகளும் தங்களது புத்தகங்களை மூடி வைத்து விட்டு தங்களது கோட்டுகளை அணிந்து கொண்டார்கள். வெளிச்சம் மிகுந்த இலையுதிர் கால சூரியஒளிக்கு கீழே நின்றார்கள். யாசினை சிறிது நேரம் காத்திருக்கச் செய்து விட்டுச் சென்ற அவனது ஆசிரியை அவனது பெயருடன் கூடிய ஒரு பேட்ஜை அவன் அணிந்திருக்கும் ஜம்பர் என்னும் மேலாடை மீது அணிவித்தார்.

‘இப்பொழுது நீ மைதானத்திற்குப் போகலாம்’ என்று அந்த ஆசிரியை புன்னகையுடன் கூறினார். ‘இப்பொழுது குழந்தைகள் அனைவரும் உனது பெயரை அறிந்து கொள்ள இயலும்.’

யாசினுக்கு அந்த பேட்ஜை அணிந்து கொள்வது முட்டாள் தனமாகத் தோன்றியது. விளையாட்டு மைதானத்திற்குள் அவன் சென்ற பொழுது குழந்தைகள் அனைவரும் அவனைப் பார்த்து கைகாட்டி சிரிக்கத் தொடங்கினார்கள்.

‘ஒரு பெண்ணுடைய பெயரை வைத்திருக்கிறாயே’ என்று சுருட்டை வெண்முடியுடன் கூடிய ஒரு சிறுவன் கூறினான்.

அந்த பெயர் ஒரு பெண்ணின் பெயரில்லை என்று கூறுவதற்கு யாசின் விரும்பினான் ஆனால் அவன் மிகவும் பதற்றமாக இருந்தான். யாசின் பதற்றப்படும் பொழுது அவனது ஆங்கிலம் சிறப்பாக இருப்பதில்லை, வார்த்தைகள் அவனது தொண்டையில் சிக்கிக் கொள்ளும். மிகவும் கவலையாக உணரத் தொடங்கினான். விளையாட்டு மைதானத்தை விட்டு ஓடிச் சென்று தன் வீட்டில் உள்ள அம்மா, அப்பாவிடம் போய் விடலாம் என்று ஆசைப்பட்டான். அந்த பள்ளிக்கு இனிமேல் ஒரு பொழுதும் வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அப்படி அவன் தப்பியோட நினைத்த நேரத்தில் ஒரு பழகிய குரல் கேட்டது.

‘ஹாய் யாசின்’ என்ற குரல் கேட்டது. யார் என்று பார்த்த பொழுது தான் அவனுக்கு முன்னால் ஆன்ட்ரு நிற்பது தெரிய வந்தது.

ஆன்ட்ரு அங்கே சுற்றிலும் இருந்த குழந்தைகளைப் பார்த்து தனது தலையை ஆட்டி எதிர்ப்பு தெரிவித்தான். ‘உங்களுக்கு என்ன ஆச்சு’ என்று அவன் கேட்டான். ‘நமது பள்ளி மிகவும் வேடிக்கை மிகுந்த பள்ளி என்று என் நண்பன் யாசினுக்கு நான் கூறி இருக்கிறேன். அந்த நல்லெண்ணத்தை ஏன் பாழாக்குகிறீர்கள்?’ என்றான்.

அந்த கூட்டத்தில் முன்பாக இருந்த ஒரு சிறுமி மிக உயரமாக இருந்தாள், அவள், ‘இவன் வித்தியாசமாக இருக்கிறானே’ என்றாள்.

‘நீ கூடத்தான் அப்படி இருக்கிறாய்’ என்று ஆன்ட்ரு பதிலளித்தான். ‘இந்த பள்ளிக்கூடத்திலேயே நீ தான் மிகவும் உயரமாக இருக்கிறாய் ஆனால் அது பற்றி மற்றவர்கள் உன்னைக் கேலி செய்தால் நீ பொறுத்துக் கொள்வாயா’ என்றான்.

அப்பொழுது ஆன்ட்ரு அந்த சுருட்டை வெண்முடியுடன் கூடிய சிறுவனிடம், ‘உன் தலைமுடி பெண்ணின் முடி போல் இருக்கிறது என்று கூறினால் உனக்கு எவ்வளவு கவலையாக இருக்கிறது’ என்றான். ‘நம் அனைவரிடமும் ஒரு வித்தியாசத் தன்மை இருக்கத்தான் செய்கிறது அது தான் ஒருவரிடம் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. நாம் எல்லோரும் ஒரே போன்று தோற்றமளித்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்’ என்றான்.

குழந்தைகளிடையே அமைதி நிலவியது.

அப்பொழுது யாசின் தனது தலையை உயரமாக உயர்த்தினான். புன்னகைத்தபடி கூறினான் ‘அது சலிப்பாக இருக்கும்.’

தனது நண்பனின் பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆன்ட்ரு ‘அது தான் சரியான உண்மை’ என்றான். ‘உண்மையிலேயே மிகவும் சலிப்புத் தட்டி விடும்!’ என்றான்.

உடனே குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரிக்கத் தொடங்கினார்கள்.

‘உண்மையிலேயே மிகவும் சலிப்புத் தட்டி விடும்!’ என்று அவர்கள் ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டார்கள்.

ஆன்ட்ரு அவர்களிடம் யாசினுடன் அந்த கோடை காலத்தில் எவ்வாறு உற்சாகமாக ஆடித் திரிந்தோம் என்ற கதையைக் கூறினான். அவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டின் பின்னே ஒரு கூடாரம் அமைத்தது, யாசினுக்கு சூப்பர்மேனைக் காட்டிலும் ஏன் பேட்மேன் பிடிக்கிறது என்பதையும், யாசினுக்கு 'ஹாட் டாக்ஸ்' என்னும் தின்பண்டங்கள் கூட பிடிக்கவில்லை என்பதையும் கூறினான்.

குழந்தைகள் அனைவரும் இன்னும் நிறைய சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் வித்தியாசம் காட்டுகின்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பீட்டர் ஜென்கின்ஸ் என்ற சிறுவன் தனது ஜம்பரைத் தூக்கிக் காட்டி தனது வயிற்றின் முன்புறம் உள்ள ஒரு பெரிய ஊதா நிற மச்சத்தைக் காட்டினான்.

அவன் வெற்றிகரமாகக் கூவினான், ‘இப்பொழுது இது தான் இங்கே வித்தியாசமானது' என்றான்.’ என்னைப் போல வேறு யாருக்கும் இவ்வளவு பெரிய மச்சம் இருக்காது என்று நான் பந்தயம் கட்டுகிறேன்' என்றான்.

இடைவேளை முடிந்த பிறகு, வகுப்பு தொடங்கியதும் ஆன்ட்ரு தன் கையை உயர்த்திக் காட்டி பேசத் தொடங்கினான். தனது ஆசிரியரிடம் மாணவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு வித்தியாசமானவர்கள் என்பது பற்றி பேசுவதற்கு ஒரு பாட வகுப்பைச் செலவழிக்க வேண்டும் என்று ஆசிரியரிடம் பரிந்துரை செய்தான். தனது நண்பன் யாசினைப் போன்று ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக, உலகெங்கிலும் இருந்து மக்கள் இங்கிலாந்துக்கு எவ்வாறு வந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் விளக்கினான்.

அந்த ஆசிரியையும், தனிநபராகத் திகழ்வதன் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொண்டார். பிரிட்டன் நாடு ஒரு பன்முக கலாச்சாரத் தீவாகத் திகழ்வது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்றார். யாசின் அந்த இரண்டு வார்த்தைகளையும் தனது புத்தகத்தில் எழுதிக் கொண்டான். அந்த வார்த்தைகள் இரண்டையும் அறிந்து கொள்வதற்கும் எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கும் உறுதி எடுத்துக் கொண்டான். அவன் மேலும் தனது புத்தகத்தில் 'நண்பன்' என்று எழுதிக் கொண்டான். அதன் பொருள் என்ன என்பதை அவன் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தான். எனினும் அதை எழுதி வைத்துக் கொள்ள விரும்பினான். ஏன் என்றால் ஆன்ட்ரு போன்ற ஒரு சிறந்த நண்பன் இருப்பதற்கு அவன் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். ஏன் என்றால் ஆன்ட்ரு போன்ற நண்பர்கள் தான், மனிதர்கள் வித்தியாசமாக இருக்கும் காரணத்தாலேயே அவர்களைத் தவறாக எடை போடுவது கூடாது மற்றும் தனது மக்களுக்காக ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவன் ஆவான்.

 

Enjoyed this story?
Find out more here