KidsOut World Stories

மந்திர வண்ணத் தூரிகை    
Previous page
Next page

மந்திர வண்ணத் தூரிகை

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

மந்திர வண்ணத் தூரிகை

ஒரு சீன நாட்டுப்புறக் கதை

 

 

 

 

 

*

ஒரு சமயத்தில் மா லியாங் என்ற ஒரு இளைஞன் இருந்தான். அவன் ஏழையாக இருந்தாலும் அன்பானவனாக இருந்தான் மற்றும் அவன் எல்லா இடங்களிலும் அழகாக படங்களை வரைந்து வைப்பதில் அவனுக்கு பெரிதும் ஆர்வம் இருந்தது. ஒரு நாள் அவனுக்கு ஒரு கனவு வந்தது. ஒரு முதியவர் அவனிடம் ஒரு மந்திர வண்ணத் தூரிகையைக் கொடுத்து அதைப் பயன்படுத்தி ஏழை மக்களுக்கு உதவும்படி கூறி விட்டு மறைந்து விடுகிறார். அவன் கனவில் இருந்து விழித்தெழுகையில் அந்த மந்திரவண்ணத் தூரிகை மேஜை மீது இருப்பதைக் கண்டான்.

அன்றிலிருந்து அவன் ஏழை மக்களுக்கு உதவி தேவைப்படும் பொழுதெல்லாம் அந்த மந்திர வண்ணத் தூரிகையைப் பயன்படுத்த ஆரம்பித்தான். ஏழை விவசாயிகள் தங்களது வயல்களில் தண்ணீரில்லாமல் வாடுவதைக் கண்டால், அவன் ஒரு ஆற்றை வரைந்திடுவான், உடனே அந்த ஆறு உண்மையாகவே நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி விடும். அந்த ஏழை விவசாயிகளும் அந்த ஆற்று நீரைத் தங்கள் வயல்களுக்குப் பாய்ச்சி தங்களது பயிர்களைக் காப்பாற்றிக் கொண்டனர். கடினமாக உழைக்கின்ற ஏழை மக்கள் உணவு போதிய அளவில் கிடைக்காமல் தவிப்பதைக் கண்டால், உணவு வகைகளை அவன் வரையத் தொடங்கியதும் அவர்கள் உண்பதற்கு போதிய உணவு கிடைத்து விடும். அந்த மந்திர வண்ணத் தூரிகையைப் பற்றி மக்கள் பலருக்கு தெரியத் தொடங்கி விட்டது, அவர்கள் அனைவரும் மா லியாங்கிற்கு நன்றி உடையவர்களாக இருந்தார்கள்.

ஆனால் அந்த கிராமத்தில் ஒரு பணக்கார மனிதனும் வசித்து வந்தான். ஆனால் அவனோ மகா கஞ்சன். அவன் அந்த இளைஞனிடம் இருந்து அந்த வண்ணத் தூரிகையைக் களவாடி அதைக் கொண்டு பெரும் பணம் சம்பாதிக்கலாம் என்று பேராசை கொண்டான். எனவே அந்த மந்திர வண்ணத் தூரிகையைக் களவாடுவதற்காக தனது வேலையாட்களை மா லியாங் வீட்டிற்கு அனுப்பினான்.

அந்த மந்திர வண்ணத் தூரிகையைக் கைப்பற்றிதும் அந்த கருமி மிக்க மகிழ்ச்சி அடைந்தான. தன் நண்பர்களிடம் தனது வீட்டிற்கு வந்து தனது புதிய பொருளைப் பார்க்கும்படி அழைப்பு விடுத்தான் அவர்கள் அங்கே வந்ததும், அந்த மந்திர வண்ணத் தூரிகை கொண்டு பல படங்களை வரைந்து தள்ளினான். ஆனால் அவை எதுவுமே உண்மை உருவமாக மாறவில்லை. தனது வண்ணத் தூரிகை வேலை செய்யாமல் போனதைக் கண்டு மிக்க ஆத்திரம் கொண்டான். எனவே மா லியாங்கை தன் இல்லத்திற்கு கடத்திக் கொண்டு வர வைத்தான்.

அவன் மா லியாங்கிடம், 'இந்த வண்ணத் தூரிகை கொண்டு சில படங்களை எனக்கு வரைந்து கொடு, அவை உண்மையான உருவங்கள் ஆனதும் உன்னை விடுதலை செய்து விடுகிறேன்' என்றான்.

இத்தகைய ஒரு மோசமான மனிதனுக்கு உதவுவதற்கு மா லியாங் விரும்பவில்லை, எனவே ஒரு யோசனை செய்தான்.

மா லியாங் அவனிடம், 'என்ன படம் வரைய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்' என்றான்.

அந்த மோசமான பணக்காரனோ, 'ஒரு தங்க மலையை வரைந்து கொடு. நான் அங்கே சென்று தங்கத்தை அள்ளிக் கொண்டு வரப் போகிறேன்' என்றான்.

மா லியாங் உடனே ஒரு கடலை வரைந்தான்.

பணக்காரனோ, 'என்ன இது, ஒரு கடலை வரைந்திருக்கிறாய்? எனக்கு ஒரு தங்க மலை வேண்டும். அதை உடனடியாக வரைந்து கொடு!' என்றான்.

மா லியாங்கும் உடனே ஒரு தங்க மலையை வரைந்தான் ஆனால் அது அந்த கடலில் இருந்து வெகு தூரத்தில் இருந்தது. 

பணக்காரனும், 'ஒரு பெரிய கப்பலையும் வேகமாக வரைந்திடு. அதில் சென்று நான் தங்கம் சேகரிக்க வேண்டும்' என்றான்.

மா லியாங்கும் அமைதியாக புன்னகைத்துக் கொண்டான். ஒரு பெரிய கப்பலை வரைந்தான். அந்த கப்பலுக்குள் அந்த பணக்காரன் தாவி ஏறிக் கொண்டான். தங்கத்தை எடுப்பதற்காக கடலுக்குள் விரைந்து சென்றான். அந்த கப்பல் நடுக்கடலுக்குள் சென்று கொண்டிருக்கும் பொழுது மா லியாங் ஒரு பெரிய அலையை வரைந்தான். அந்த அலை அந்த கப்பலை முற்றிலும் அழித்து விட்டது. அதன் பிறகு அந்த பணக்காரன் அந்த கிராமத்திற்கு திரும்பவும் வரவே இல்லை.

அதன் பிறகு மா லியாங் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசித்தான். தனது கனவில் அந்த முதியவர் கேட்டுக் கொண்டது போல அந்த மந்திர வண்ணத் தூரிகையைப் பயன்படுத்தி ஏழை மக்களுக்கு உதவத் தொடங்கினான். அவனை அனைத்து ஏழை மக்களும் பாராட்டினார்கள்.

Enjoyed this story?
Find out more here