KidsOut World Stories

சாபம் Vasconcelos Monteiro    
Previous page
Next page

 

 

 

 

சாபம்

ஒரு போர்த்துகீசியக் கதை

 

 

 

 

 

*

முன்னொரு காலத்தில், பெரிய காட்டின் ஓரத்தில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. இது பெரும்பாலும் அமைதியான கிராமமாக இருந்தது. ஆனால், கிராம மக்கள் லோபிசோனுக்கு பயந்து வாழ்ந்தனர். லோபிசோன்கள் காட்டின் உள் பகுதியில் வாழ்பவர்கள். லோபிசோன்கள் கருப்பு நிற உயிரினங்கள். அது பார்ப்பதற்கு பாதி மனிதன் பாதி ஓநாய் போல இருக்கும். ஒவ்வொரு முழு நிலவிலும் லோபிசோன்கள் மனித சதையைத் தேடி காட்டிலிருந்து ஊர்ந்து வெளியே வரும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், அத்தகைய உயிரினம் எப்படி உருவாகிறது? அது எளிது. ஒரு குடும்பத்தில்  பிறந்த ஏழாவது மகனுக்கு கிடைத்த சாபம் இது. சாபம் எந்த மகள்களுக்கும் கிடையாது. ஆனால், ஒரு அம்மா ஏழு மகன்களைப் பெற்றெடுத்தால், கடைசி மகன் நிச்சயமாக லோபிசோனாக மாறுவான்.

பிலிப் பிறந்தபோது அவனது அம்மா பயந்தாள். அவள் ஏழாவதாக ஒரு மகளை எதிர்பார்த்தாள். மகனை எதிர்பார்க்கவில்லை. ஆனால், பிலிப்பின் அம்மா அன்பானவள், இரக்க குணம் கொண்டவள். சாபத்தைப் பற்றி கிராம மக்கள் என்ன சொன்னாலும், அவள் தன் சொந்தக் குழந்தைக்கு எதிராக எதுவும் செய்யப் போவதில்லை.

பல ஆண்டுகள் அமைதியுடன் கடந்துவிட்டன. பிலிப் ஒரு வலிமையான பையனாக வளர்ந்தான். அம்மா, அப்பா மற்றும் ஆறு சகோதரர்களும் அவன் மேல அதிக அன்பாக இருந்தார்கள். ஆனால், பிலிப்பை மற்ற சகோதரர்கள் போல இல்லாமல் வித்தியாசமாக நடத்துவதை அவன் கவனிக்கவில்லை. ஆசிரியர் அனுமதிக்காததால் அவன் பள்ளிக்குச் செல்லவில்லை. இது நியாயமில்லை. ஏனென்றால், அந்தச் சிறுவன் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினான். மற்ற குழந்தைகளுடன் நட்பாக இருக்கவும்  விரும்பினான்.

பிலிப்பை எப்போதாவது அவன் அம்மா ரொட்டி வாங்க அனுப்பினால், கிராம மக்கள் அவன் செல்லும் வழியில் குறுக்கே வர மாட்டார்கள். எப்போதும், அவனை பயம் மற்றும் வெறுப்பு கலந்த பார்வையுடன் பார்ப்பார்கள். அது அந்தச் சிறுவனைப் பயமுறுத்தியது. மற்ற குழந்தைகள் அவனுடன் விளையாட மாட்டார்கள். முழு நிலவு இருக்கும்போது அவனை தோட்டத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள்.

கடைசியாகச் சொன்னது எல்லாவற்றையும் விட மிக மோசமானதாக இருந்தது. ஏனென்றால், பிலிப்புக்கு நிலா மிகவும் பிடிக்கும். குறிப்பாக, அது இரவில் வானத்தில் முழு வட்டமாக இருப்பது பிடிக்கும். அது பிலிப்பிடம் பேசுவது போலவும், அவனது உற்சாகத்தைத் தூண்டி, அவனைப் பாடி, ஆடி, ஓடச் செய்வது போலவும் இருக்கும்.

வாழ்க்கை அமைதியாக இருந்தாலும், அது மகிழ்ச்சியாக இல்லை. ஒவ்வொரு வருடமும் பிலிப்புக்குத் தனிமையில் இருப்பது போல இருந்தது. அவனுக்கு நண்பர்கள் இல்லை. மற்ற குழந்தைகளுடன் விளையாட யாரும் அவனை அழைத்ததில்லை. சில நேரங்களில், அவன் அவர்களின் சிரிப்பைக் கேட்டு, அவர்கள் என்ன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள், அவர்கள் அனைவரும் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கற்பனை செய்வான்.

அவன் அம்மாவும், சகோதரர்களும் கூட அவனை விசித்திரமாகப் பார்க்கத் தொடங்குவதை பிலிப் கவனித்தான்.

‘என்னிடம் என்ன தவறு உள்ளது? நான் அவ்வளவு மோசமான பையன் இல்லை. நான் என் வேலைகளைச் செய்கிறேன். நான் எப்போதும் தவறாக நடந்து கொண்டதில்லை. மற்ற குழந்தைகளிடமிருந்து என்னை ஏன் இவ்வளவு வித்தியாசமாக நடத்துகிறார்கள்?’ என்று பிலிப் அடிக்கடி அவனிடமே கேட்டுக்கொண்டான்.

அவனுக்கு பதினைந்தாவது பிறந்தநாள் வரும் போது, பிலிப் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் சோகமாக இருந்தான்.

அவனது அம்மா அவனை மிகவும் அரிதாக வீட்டை விட்டு வெளியே அனுப்புவார். மேலும், அவனுடன் இருக்கும்போது அம்மா பதட்டமாகவே இருப்பார். அவன் அவனுடைய வீட்டிற்கு அருகில் தனியாக விளையாடுவதை மோசமான குழந்தைகள் பார்த்தால், அவன் மீது கற்களை எறிவார்கள். ஆனால், அவன் அவர்களைப் பார்த்துத் திரும்பும்போது, அவர்கள் ஒரு அரக்கனைப் பார்த்தது போல கத்திக் கொண்டு ஓடி விடுவார்கள். சில நேரங்களில், பிலிப் பெரிய காட்டுக்குள் தப்பிச் சென்று திரும்பி வரவே கூடாது என்று நினைத்தான்.

ஒரு நாள், அவனது அம்மா அவனை உட்கார வைத்து, அவனது பிரச்சனைகளுக்கான காரணத்தை அவனுக்கு விளக்கினாள். 'நீ என் ஏழாவது மகன். உன் மீது ஒரு சாபம் இருக்கிறது' என்று அவள் சொன்னாள்.

பிலிப் மிகவும் குழப்பமாக இருந்தான் . 'என்ன மாதிரியான சாபம்?' என்று அவன் கேட்டான்.

'உன் பதினைந்தாவது பிறந்தநாளில் நீ ஒரு லோபிசோனாக மாறிவிடுவாய். அது பாதி மனிதனாகவும் பாதி ஓநாயாகவும் இருக்கும் ஒரு உயிரினம்’ என்று கூறினார்.

பிலிப் தனது புத்தகங்களிலிருந்தும், இரவில் அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்து அவன் சகோதரர்கள் பேசிக் கொண்டகதைகளிலிருந்தும் லோபிசோன்களைப் பற்றி அறிந்திருந்தான்.

ஆனால், அவன் அப்படி சபிக்கப்பட்டதாக அவர்கள் ஒருபோதும் பிலிப்பிடம் சொல்லவில்லை. அவன் ஒரு லோபிசோனாக இருக்க விரும்பவில்லை. அவன் கொடூரமாகவோ அல்லது குரூரமாகவோ இருக்க விரும்பவில்லை. மேலும், அவன் உடல் முழுவதும் நீண்ட நகங்களும், அடர்த்தியான முடிகளும் இருந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி அவன் சிந்திக்கவில்லை.

அவனது பதினைந்தாவது பிறந்தநாள் அன்று மாலை, பிலிப் தனது வாழ்நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு சோகமாக இருந்தான். அவன் இரவில், படுக்கையில் எழுந்து உட்கார்ந்து அழுதான். 'நான் எப்போதும் தனியாக இருந்திருக்கிறேன்,' என்று அவன் நினைத்தான். 'நான் எப்போதும் வித்தியாசமாக நடத்தப்பட்டிருக்கிறேன். இப்போது எனக்கு ஒரு லோபிசோனாக மாறும் சாபம் உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்? மற்ற அனைவரையும் போலவே என்னையும் நடத்த வேண்டும் என்று தான் நான் எப்போதும் ஆசைப்படுகிறேன். எனக்கு எப்போதும் நண்பர்களுடன் காட்டில் விளையாட வேண்டும். இரவில் அழகான நிலவைப் ரசிக்க வேண்டும். இது தான் என் ஆசை' என்று நினைத்தான்.

அப்போது, பிலிப் அவனது படுக்கையறை ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, நிலா கரு நீல வானத்தில் நட்சத்திரங்களுடன் மேலே வந்தது. அது ஒரு பெரிய அழகான முழு நிலவு. அது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பின்னர், மிகவும் விசித்திரமான ஒன்று நடந்தது. பிலிப்பின் வயிற்றில் ஒரு கலக்கம் தெரிந்தது. அவனது தோல் முழுவதும் அரித்தது. அவனது நெஞ்சிலிருந்து ஒரு அலறல் சத்தம் வந்தது. அவன் தலையை உயர்த்தி நிலாவைப் பார்த்து இதற்கு முன்னாடி இல்லாதது போல வித்தியாசமாக கூப்பிட்டான்.

திடீரென்று அவன் உடல் முழுவதும் முடி முளைத்தது. அவன் கைகளிலும் கால்களிலும் இருந்த நகங்கள் எல்லாம் நீளமான யானை தந்த நிறம் போல மாறியது. அவனுடைய உடைகள் கிழிந்து அவன் காலடியில் தரையில் விழுந்தன. பிலிப் கண்ணாடியில் பார்த்தபோது, உடல் முழுவதும் அடர்த்தியான முடிகளுடனும், இருட்டில் மின்னும் சிவப்பு கண்களுடனும் அவனைப் பார்க்கும் ஒரு உயரமான ஓநாய் சிறுவனின் பிரதிபலிப்பைக் கண்டான்.

‘அப்படியானால், நான் ஒரு லோபிசோன்!’ என்று அவன் கூச்சலிட்டான்.

பிலிப் நிலா மற்றும் காடு அவனை அழைப்பதை உணர்ந்தான். அவனுடைய பழைய வாழ்க்கையை விட்டு விலகி அவனுடைய விதியை அடைய வேண்டிய நேரம் இது என அவனுக்குத் தெரிந்தது.

இளம் ஓநாய் சிறுவன் தன் படுக்கையறை ஜன்னலைத் திறந்தான். இரவு வாழ்க்கைக்குச் செல்லும் முன், அவனுடைய பழைய படுக்கையறையைக் கடைசியாகச் சுற்றிப் பார்த்தான். அவனுடைய அம்மா, அப்பா மற்றும் ஆறு சகோதரர்களைப் பற்றி யோசித்தான். ‘என் அன்பான குடும்பமே, உங்களை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். ஆனால், இப்போது நான் யார் என்பதை ஏற்றுக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.’

பின்னர், அவன் படுக்கையறை ஜன்னலிலிருந்து குதித்து, நிலாவைப் பார்த்து ஊளையிட்டுக் கொண்டே  காட்டுக்குள் ஓடினான். அவன் மனதில் எதிர்காலத்திற்கான விசித்திரமான புதிய நம்பிக்கை பிறந்தது.

பிலிப் பெரிய காட்டின் உள் பகுதிக்கு சென்ற போது, அவன் ஒரு அழகான வெற்றுப் பகுதியில் நின்று, வானத்தில் உயரமான பழங்கால மரங்களையும் அழகான நிலாவையும் பார்த்தான். அவன் அலறி, ஊளையிட்டு, குதித்து, நடனமாடி, சிரித்தான். கடைசியில், அவர் அலறி, நடனமாடுவதை நிறுத்தியபோது, அவனைச் சுற்றி மற்ற லோபிசோன்கள் கூடியிருப்பதைப் பார்த்தான். சிலது பிலிப்பைப் போல இளமையாக இருந்தன. சிலது வயதானவை.

அவைகள் பிலிப்பை அணுகி அவனை வரவேற்றது.

‘நீ இப்போது இந்த பெரிய காட்டில் நண்பர்களுடன் இருக்கக்கூடிய வீட்டிற்கு வந்துவிட்டாய்’, என்று ஒரு லோபிசோன் அன்பான மற்றும் மென்மையான குரலில் கூறியது. அப்போது தான் பிலிப் சபிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தான்.

‘நான் ஒரு லோபிசோன். நான் வீட்டில் இருக்கிறேன்’ என்று அவன் புன்னகையுடன் தலையை உயர்த்தி முழு நிலவைப் பார்த்து தன் முழு பலத்தோடு அலறினான். மற்ற லோபிசோனும் சேர்ந்து, நிலாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரவு வானத்தில் ஒன்றாக சத்தமாக ஊழையிட்டன.

பல மைல்களுக்கு அப்பால், பிலிப்பின் அம்மா அவருடைய இரவு உடையை அணிந்து தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். பெரிய காட்டில் இருந்து வரும் மென்மையான காற்றில் கேட்கும் லோபிசோனின் அலறலைக் கேட்டுக்கொண்டிருந்தாள். தனது ஏழாவது மகன் கடைசியாக ஒரு வீட்டைக் கண்டுபிடித்துவிட்டான். அங்கு அவனுக்குப் பல நண்பர்கள் இருப்பார்கள். நீண்ட காலம் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வான் என நினைத்த அந்தப் பெண் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

Enjoyed this story?
Find out more here