KidsOut World Stories

ஆமையும் முயலும் KidsOut    
Previous page
Next page

ஆமையும் முயலும்

A free resource from

Begin reading

This story is available in:

 

 

 

 

ஆமையும் முயலும்

  

Tortoise and Hare Racing

 

 

 

 

 

 

 

*

ஒரு காலத்தில் ஊருக்கு அருகில் இருந்த ஒரு வயல் காட்டில், சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு முயலும், தூங்கி வழியும் ஒரு ஆமையும் வாழ்ந்து வந்தன.

சந்தோஷமான முயலுக்கு நோயல் என்று பெயர். தூங்கி வழியும் ஆமைக்கு ஆர்ச்சிபால்ட் என்று பெயர். ஆர்ச்சிபால்ட் ஆமைக்கு உட்கார்ந்து மெதுவாக தனது இரவு உணவை மெல்வதுதான் பிடிக்கும். ஆனால், நோயல் முயல், தனது இரவு உணவை உடனே விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, களைத்துப் போகும் வரை ஆர்ச்சிபால்ட் ஆமையையே சுற்றிச் சுற்றி ஓடும்.

ஒரு நாள், அவர்களுக்குள் ஒரு வாய்ச்சண்டை வந்தது:

“இந்தப் பூமியிலேயே மிக வேகமாக ஓடும் விலங்கு நான் தான்,” என்றது நோயல். “நான் சிக்கென்று ஓடும் சிறுத்தைப்புலி, உதைத்துக் கொண்டோடும் கங்காரு, பறந்தோடும் பந்தய முயல் எல்லாவற்றையும் விட அதிவேகமாக ஓடுவேன்,” என்று பெருமை பேசியது நோயல்.

“ச்சே, கொஞ்சநேரம் சும்மா இருக்கமாட்டாயா?” என்று அலுத்துக்கொண்டது ஆர்ச்சிபால்ட் ஆமை. “நீயே எப்போதும் உன்னைப் பற்றியே பேசி அறுக்கிறாய்! நீ கவனமாக இல்லை என்றால், உன் வாழ்க்கை சிக்கலில் மாட்டிக்கொள்ளும்.”

“எங்கே இருக்கிறது சிக்கல்?” என்று கேட்டது நோயல். “அது இங்கே இருந்து மிகவும் தூரத்தில் இருக்கிறதோ?”

ஆர்ச்சிபால்ட் தன் கண்களை உருட்டியபடி சில சுவையான இலை தழைகளை மென்று தின்றுகொண்டிருந்தது.

அப்போது அங்கு கடந்து சென்ற காகம், “நீங்கள் இருவரும் சண்டையிடுவதை உடனே நிறுத்த வேண்டும்,” என்றது.

“இல்லை, இது முக்கியமான பிரச்சனை,” என்றது நோயல் முயல். “இந்தப் பரந்த பூமியிலேயே வேகமாக ஓடும் விலங்கு நான் தான் என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!”

“சரி,” ஆர்ச்சிபால்ட் ஆமை கூறியது. “நானும் நீயும் ஓட்டப் பந்தயம் வைத்துக்கொள்வோம்!”
இதைக்கேட்ட நோயல், ஆணவத்துடன் சிரித்தது.

“நீ பொறுத்திருந்து பார்,” என்று சொன்னது ஆர்ச்சிபால்ட். “நான் அறிவாற்றல் மிக்க முதிய ஆந்தையான வாலஸை நம் ஓட்டப் பந்தயத்தை நடத்தும் அதிகாரியாக நியமிக்கிறேன்.”

அடுத்த நாளே, ஞானமும் அறிவாற்றலும் கொண்ட வாலஸ் ஆந்தை ஓட்டப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது. எல்லா விலங்குகளும் அந்தப் போட்டியைப் பார்க்க நல்ல ஆடைகளை அணிந்து, தங்கள் உடல் முடிகளை அழகாக வாரிக்கொண்டு, கையில் கொடியுடன் ஆமையையும், முயலையும் வாழ்த்துவதற்கு கிளம்பத் தயாராயின.

“சரியாக கோட்டில் நில்லுங்கள் ... தயார் ஆகுங்கள் ... ஓடலாம்!” என்று வாலஸ் சொல்ல, ஓட்டப் பந்தயம் ஆரம்பமானது!
மெதுவாக, மெதுவாக ஆர்ச்சிபால்ட் ஆமை நடக்க, விரைவாக, விரைவாக நோயல் முயல் பந்தயத்தில் ஓடி, விரைவில் விலங்குகளின் பார்வையை விட்டே மறைந்தது. உண்மையில், நோயல் முயல் அதிக தூரம் ஓடிவிட்டது. அது திரும்பிப் பார்க்கையில், ஆர்ச்சிபால்ட் ஆமை கண்ணுக்கே தெரியவில்லை.

“ஐயோ ... பாவம்!” என்று நினைத்தது நோயல். “நான் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டேன்! இப்போது பேசாமல் இந்த மரத்தின்கீழ் ஒரு குட்டித்தூக்கம் போடலாம் ... இன்று அவ்வளவு வெயில்!” என்று தனக்குள் நினைத்தது முயல். அடுத்த கணமே, நன்றாகவே தூங்கிவிட்டது முயல்.

இதற்கிடையில், ஆர்ச்சிபால்ட் ஆமை மெதுவாக ஊர்ந்தபடி தன் ஓட்டின்மீது சூரிய வெப்பத்தின் கதகதப்பை அனுபவித்தவாறும், அவ்வப்போது புல்லின் இதழ்களைக் கடித்துத் தின்றவாறும் முன்னேறி வந்தது. இன்னும் முன்னேறி, முன்னேறி ... தொடர்ந்து முன்னேறி ஆமை நடந்துகொண்டே சென்றது. அதன் வழியில் ஒரு ஓக் மரம் வந்தது, அப்புறம் ஒரு பாலம் வந்தது.

மாட்டுக்கொட்டகையைக் கடந்து தாண்டிப்போய், மரத்தடியில் இன்னும் குறட்டைவிட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் நோயல் முயலையும் அது கடந்துசென்றது. கடைசியாக, ஓட்டப் பந்தயத்தின் எல்லைக் கோட்டையும் முதலில் அடைந்தது ஆமை. அங்கு சாதுர்யமான வாலஸ் ஆந்தையும், மற்ற விலங்குகளும் கூடி, ஆமையை வரவேற்றன. ஆர்ச்சிபால்ட் ஆமைக்கு அனைத்து விலங்குகளும் உற்சாக வாழ்த்துக்களைக் கூவி வழங்கினர்:

“நல்லது! நல்லது! நீங்கள்தான் வெற்றியாளர்!”

அனைத்து விலங்குகளின் வாழ்த்துச் சத்தமும் சேர்ந்து நோயல் முயலின் தூக்கத்தைக் கலைத்தது.

“ஓ கடவுளே! ஓ கடவுளே! இங்கே என்ன நடக்கிறது? எல்லா விலங்குகளும் ஏன் கூச்சலிடுகின்றன? கவலைப்படாதே. வேகமாக எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டு, பிறகு ஜாலியாக இரவு உணவைச் சாப்பிடச் செல்லலாம்,” என்று நினைத்தது முயல்.
நோயல் எல்லைக் கோட்டை நோக்கி மலைப் பாதையில் கீழிறங்கி ஓடியது. ஆனால், அங்கு வந்தபோது, அதற்கு அதிக பயமாகிவிட்டது. அங்கு ஆர்ச்சிபால்ட் ஆமை முதலாவதாக வந்து, அந்த வெற்றிக்காக தன் கழுத்தில் தங்கப் பதக்கத்தையும் அணிந்துகொண்டு நின்றது!

“இது சரியானதாக இருக்க முடியாது! நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்,” நோயல் முயல் அழுது கத்தியது. “எல்லோருக்கும் தெரியும், நான் ஆமையைவிட வேகமாக ஓடுபவன் என்று!”

“ஆர்ச்சிபால்ட் ஆமை ஏமாற்றவில்லை,” சாதுர்யமான வாலஸ் ஆந்தை தீர்ப்பு வழங்கியது. “ஆர்ச்சிபால்ட் மிக நியாயமான வகையில், சந்தேகத்துக்கு இடமின்றி வென்றுள்ளது. மெதுவாக, ஆனால் நிச்சயமாக ... ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் ... ஆர்ச்சிபால்ட் தான் எல்லைக் கோட்டை முதலில் தாண்டியது. மன்னிக்கவும் நோயல் கிழவரே, நீங்கள் பந்தயத்தில் தோற்றுவிட்டீர்கள். இது உங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் – மெதுவாகவும் சீராகவும் செல்பவனே பந்தயத்தில் வெல்கிறான்!”

நோயல் கவலையில் ஆழ்ந்தது. அதன் முகம் வாடிப்போனது. ஆர்ச்சிபால்ட் ஆமை முயலின் மீது பரிதாபப்பட்டு அதைச் சந்தோஷப்பட முயற்சித்தது:

“நோயல் உற்சாகமாய் இரு ... இது ஒரே ஒரு பந்தயம் தானா ...” ஆர்ச்சிபால்ட் கூறியது. “அடுத்த பந்தயத்தில் நீ வெற்றி பெறுவாய் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த சூரியனுக்கு கீழ், எந்தப் பந்தயத்தில் யார் வெற்றி பெற்றாலும், நாம் எப்போதும்போல நல்ல நண்பர்களாகவே இருப்போம்!”

அந்த நாள் முதல், அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக வாழ்ந்துவந்தனர். நோயல் முயல் அதன் பிறகு தன்னைப் பற்றி ஒருபோதும் பெருமையடித்துக் கொள்வதே இல்லை.

Enjoyed this story?
Find out more here